Published : 07 Apr 2023 10:52 PM
Last Updated : 07 Apr 2023 10:52 PM
லக்னோ: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதாக வீழ்த்தியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
122 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் இம்முறை சுமாரான துவக்கமே கொடுத்தார். 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த அவரை ஃபசல்ஹக் ஃபரூக்கி அவுட் ஆக்கினார். தீபக் ஹூடா 7 ரன்களோடு திருப்திப்பட்டுகொள்ள, ஓப்பன் கேஎல் ராகுலுடன் இணைந்து ஆடினார் க்ருனால் பாண்டியா.
ஆட்டத்தை விரைவாக முடிக்கும் நோக்கில் ஆடிய அவரை உம்ரான் மாலிக் அவுட் ஆக்கினார். தன் பங்கிற்கு 23 பத்துகளில் 34 ரன்கள் அவர் பெவிலியன் திரும்ப நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் 35 ரன்களுக்கு வீழ்ந்தார்.
இதன்பின் விக்கெட்கள் வீழ்ந்தாலும், 24 பந்துகள் மீதமிருக்கையில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி லக்னோ அணி வெற்றிபெற்றது. ஸ்டாய்னிஸ் 10 ரன்களும், நிகோலஸ் பூரன் 11 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் ஆதில் ரஷீத் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி. அதேநேரம் ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
லக்னோ இன்னிங்ஸ்: லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், அன்மோல்பிரீத் சிங்கும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 8 ரன்களில் கிளம்ப, ராகுல் திரிபாதி களத்துக்கு வந்து சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் வந்த முதல் பந்திலேயே போல்டாக, அவருக்கு பின் வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்களில் முடித்துக்கொண்டார்.
நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதியும் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப அணியின் ஸ்கோரில் பெரிய அளவில் எந்த முன்னேறமுமின்றி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ரன்களை சேர்த்து பரிதாபமாக விளையாடியது.
வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களில் விக்கெட்டாகி பெவிலியன் சென்றடைய, ஆதில் ரஷித் 4 ரன்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த உம்ரான் மாலிக் ரன் எதுவும் எடுக்காமல் அவர்களுடன் ஐக்கியமானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. அப்துல் சமத் 21 ரன்களுடம், புவனேஸ்குமார் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
லக்னோ ஸ்பின்னர்ஸ் தரப்பில் குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT