Published : 06 Apr 2023 11:23 PM
Last Updated : 06 Apr 2023 11:23 PM
கொல்கத்தா: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
205 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபிக்கு கடந்த போட்டியை போலவே, அதிரடி துவக்கம் கொடுத்தனர் விராட் கோலியும், ஃபாஃப் டு பிளெசிஸ்ஸும். ஓவருக்கு 10 ரன் ரேட்டில் அதிரடி காட்டிய நிலையில், அவர்களை விரைவாகவே பிரித்தார் மூத்த வீரர் சுனில் நரேன். அவர் முதல் விக்கெட்டாக 21 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை கிளீன் போல்டாக்க, 23 ரன்கள் எடுத்திருந்த டு பிளெசிஸ்ஸை அடுத்த ஓவர் வீசிய வருண் சக்கரவர்த்தி கிளீன் போல்டக்கி வெளியேற்றினார்.
ஓப்பனிங் இணை அடுத்தடுத்த விக்கெட்டை இழக்க, ஆர்சிபி வீரர்களின் சரிவு ஆரம்பித்தது. மீண்டும் 7வது ஓவர் வீச வந்த வருண் சக்கரவர்த்தி இந்த ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் (5 ரன்கள்) , ஹர்ஷல் படேல் (0 ரன்) இருவரையும் போல்டாக்கி நடையைக்கட்ட வைத்தார். அடுத்த ஓவரில் ஷாபாஸ் அகமதுவை சுனில் நரேன் வழியனுப்பி வைத்தார்.
சீனியர் ஸ்பின்னர்கள் ஒருபுறம் என்றால், அறிமுக வீரராக களமிறங்கிய 19 வயது சுயாஷ் சர்மா தனது லெக் ஸ்பின்னில் ஓவருக்கு ஒரு விக்கெட் என தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா என மூன்று பேரையும் அவுட் ஆக்கி ஆர்சிபிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இறுதியாக, வருண் சக்கரவர்த்தி தனது கடைசி ஓவரில் ஆகாஷ் தீப் விக்கெட்டை வீழ்த்த, 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது சுருண்டது பெங்களூரு அணி. இதன்மூலம் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் நால்வர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகினர். கொல்கத்தா தரப்பில், வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட், சுனில் நரேன் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட், ஷர்துல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இத்தொடரில் கொல்கத்தா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
கேகேஆர் இன்னிங்ஸ்: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.
ஒருபுறம் ரஹ்மானுல்லா நிலைத்து நிற்க மறுபுறமிருந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் போல்டானார். அவருக்கு அடுத்து வந்த மந்தீப் சிங்கும் அடுத்த பாலே போல்டு. நிதிஷ் ராணாவும் 1 ரன்களில் கிளம்ப 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களைச் சேர்த்திருந்தது கொல்கத்தா.
44 பந்துகளில் 57 ரன்களை குவித்த ரஹ்மானுல்லாவை கரண் சர்மா அவுட்டாக்க, அடுத்து வந்த ரஸல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியின் திரும்பினார். பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் தட்டு தடுமாறி 17 ஓவர்களில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 160 ரன்கள் வரை சேர்த்தது கொல்கத்தா. அதுவரை அவுட்டான வீரர்களுக்கும் சேர்த்து அடுத்து வந்த ஷர்துல் தாக்கூரும் ரின்கு சிங்கும் இணைந்து 50 பந்துகளில் 103 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி காட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT