Published : 06 Apr 2023 01:06 PM
Last Updated : 06 Apr 2023 01:06 PM

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதீர் நாயக் காலமானார்

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதீர் நாயக் காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (ஏப்ரல் 5) இரவு உயிரிழந்தார்.

இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தொடக்க ஆட்டக்காரரான அவர் முதல் தர கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி, 4,376 ரன்கள் குவித்துள்ளார். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பிட்ச் பொறுப்பாளராக பணியாற்றியவர்.

2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஆடுகள பராமரிப்பாளரும் அவர்தான். இது பிட்ச் மற்றும் அவுட்-ஃபீல்ட் என இரண்டும் அடங்கும். ஜாஹிர் கான், வாசிம் ஜாஃபர் ஆகியோரின் கிரிக்கெட் கேரியருக்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளார். 1971-ல் மும்பை அணியை வழிநடத்தி ரஞ்சிக் கோப்பை வெல்ல செய்தார். அந்த முறை சுனில் கவாஸ்கர், அஜித் வடேகர், திலீப் சர்தேசாய் மற்றும் அசோக் மன்கட் ஆகியோர் இந்திய அணிக்காக மேற்கிந்திய தீவுகளில் விளையாடிய போது அணியை வெற்றி பெற செய்தார் சுதீர் நாயக்.

அவரது மறைவுக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கிரண் மோர் ஆகியோர் சுதீர் நாயக் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x