Published : 06 Apr 2023 08:11 AM
Last Updated : 06 Apr 2023 08:11 AM

சாய் சுதர்ஷன் பெரிய அளவில் சாதிப்பார்: குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை

சாய் சுதர்ஷன்

புதுடெல்லி: தொழில்முறை கிரிக்கெட்டில் சாய் சுதர்ஷன் அடுத்த 2 வருடங்களில் பெரிய அளவில் சாதிப்பார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 163 ரன்கள் இலக்கை துரத்திய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 11 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்ஷன் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டேவிட் மில்லர் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி பெறும் தொடர்ச்சியான 2-வது வெற்றி இதுவாகும்.

போட்டி முடிவடைந்ததும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது. சாய் சுதர்ஷன் பயங்கரமாக பேட்டிங் செய்கிறார். இதற்காக அவரையும், அவருக்கு உதவி செய்த பயிற்சியாளர்களையும் பாராட்டியாக வேண்டும். கடந்த 15 நாட்களாக அவர் பேட்டிங் செய்த விதமும், அவரது கடின உழைப்பையும்தான் தற்போது நீங்கள் முடிவுகளாக பார்க்கிறீர்கள். முன்னோக்கிச் செல்லும் வகையில், நான் கூறுவது தவறாக இல்லாமல் இருந்தால், சாய் சுதர்ஷன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொழில்முறை ஆட்டங்கள் மற்றும் இந்தியாவுக்கு பெரிய அளவில் ஏதேனும் சாதிப்பார்.

போட்டியின் போது எனது உள்ளூணர்வின் படி செயல்படுவதே வெற்றிக்கான மந்திரமாக கருதுகிறேன். முதல் அடி வாங்குவதை விட முதல் அடியை கொடுப்பதையே விரும்புகிறேன். பந்துவீச்சின் போது தொடக்கத்தில் சற்று வேடிக்கையாக இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. ஆனால் ஏதோ நடந்தது. பவர் பிளேவில் 15 முதல் 20 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம். ஆனால் அதன் பிறகு எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டு வந்தனர். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x