Published : 06 Apr 2023 07:23 AM
Last Updated : 06 Apr 2023 07:23 AM
டூனிடின்: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. பந்து வீச்சில் ஆடம் மில்னே 5 விக்கெட்களை வீழ்த்தியும், பேட்டிங்கில் டிம் ஷெய்பர்ட் 79 ரன்களை விளாசியும் அசத்தினர்.
நியூஸிலாந்தின் டூனிடின் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 37, குஷால்பெரேரா 35, ஷாரித் அசலங்கா 24, குஷால் மெண்டிஸ் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
நியூஸிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே 4 ஓவர்களை வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 5 விக்கெட்களை வீழ்த்திய 3வது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் ஆடம் மில்னே. இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக டிம் சவுதி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லாக்கி பெர்குசன் ஆகியோர் 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாட் போவ்ஸ் 31 ரன்களில் ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார். தனது 6-வது அரை சதத்தை விளாசிய டிம் ஷெய்பர்ட் 43 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், கேப்டன் டாம் லேதம் 30 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
32 பந்துகளை மீதம் வைத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஆட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT