Published : 06 Apr 2023 12:00 AM
Last Updated : 06 Apr 2023 12:00 AM
கவுஹாத்தி: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, இம்முறை வித்தியாச ஓப்பனிங்கை சோதித்தது. ஜெய்ஸ்வால் உடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓப்பனிங் வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால் இந்த சோதனையை தவிடுபொடியாக்கினார் அர்ஷதீப் சிங். ஜெய்ஸ்வாலை 11 ரன்களுக்கும், அஸ்வினை பூஜ்ஜியத்திலும் அவுட் ஆக்கி ஆரம்பத்திலேயே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அர்ஷதீப் சிங், ஓப்பனிங் இணையை வழியனுப்பி வைத்தார் என்றால், நேதன் எல்லிஸ் மிடில் ஆர்டரை பார்த்துக்கொண்டார். முதல் விக்கெட்டாக அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லரை 19 ரன்களுக்கு அவுட் ஆக்கியவர், அடுத்தடுத்த ஓவரில் விக்கெட்டாக வீழ்த்தினார். அதிரடியாக விளையாடி 42 ரன்கள் சேர்த்திருந்த கேப்டன் சஞ்சு சாம்சனை இரண்டாவது விக்கெட்டாக வெளியேற்றினார். நேதன் எல்லிஸ் 15வது ஓவரில் மட்டும் முதல் பந்தில் ரியான் பராக்கை வெளியேற்றியதோடு, கடைசி பந்தில் தேவ்தத் படிக்கல்லை பெவிலியன் திரும்ப வைத்தார்.
இறுதிக்கட்டத்தில் ஹெட்மெயர், துருவ் ஜூரல் இணை சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்டத்தில் திடீர் சுவாரசியம் நிலவியது. 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என துருவ் ஜூரல் விளாச 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்த ஹெட்மெயர் ரன் அவுட் ஆனார். 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, சாம் கர்ரன் திறமையாக பந்துவீசி சிங்கிள்கள் மட்டும் எடுக்க வைத்தார்.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் பஞ்சாப் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் நேதன் எல்லிஸ் 4 விக்கெட்டும், அர்ஷதீப் சிங் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடிக்க 9 ஓவர் வரை எந்த விக்கெட்டும் இல்லாமல் 86 ரன்கள் சேர்க்கப்பட்டது.
34 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்து ராஜஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிரப்சிம்ரன் சிங்கை ஜேசன் ஹோல்டர் அவுட்டாக்கினார். ராஜஸ்தானுக்கு இது முக்கியமான விக்கெட். அடுத்து வந்த பானுகா ராஜபக்சா காயம் காரணமாக வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருபுறம் ஷிகர் தவான் நிலைத்து நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களுடனும், ஷிக்கந்தர் ராஜா 1 ரன்னிலும் நடையைக்கட்டினர். இதனால் 18 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. 56 பந்துகளில் 86 ரன் என்ற ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், சாஹல், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT