Last Updated : 04 Apr, 2023 08:24 AM

 

Published : 04 Apr 2023 08:24 AM
Last Updated : 04 Apr 2023 08:24 AM

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி: ருதுராஜ், மொயின் அலி அசத்தல்

சென்னை - லக்னோ இடையிலான போட்டி

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கேவுக்கு ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் விளாசப்பட்டன.

இந்த ஜோடியின் அதிரடியால் 8 ஓவர்களில் சிஎஸ்கே 100 ரன்ளை எட்டியது. 10வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் இந்த ஜோடியை பிரித்தார். அவர் வீசிய பந்தில் ருதுராஜ், மார்க் வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ருதுராஜ் 31 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். மார்க் வுட் வீசிய அடுத்த ஓவரில் டேவன் கான்வே, பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் நின்ற க்ருணல் பாண்டியாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கான்வே 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 16 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் விளாசிய நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மொயின் அலி 13 பந்துகளில்,3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். மற்றொரு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் பந்தில் நடையை கட்டினார்.

இறுதிக்கட்டத்தில் அம்பதி ராயுடு மட்டையை சுழற்றினார். மார்க் வுட் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார் அம்பதி ராயுடு. ரவீந்திர ஜடேஜா 3 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். இதையடுத்து களமிறங்கிய தோனி, தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட நிலையில் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு 27 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசிய நிலையில் மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. தீபக் ஹூடா 2, கே.எல்.ராகுல் 20, கிருணல்பாண்டியா 9, மார்கஸ் ஸ்டாயினிஸ் 21 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் 32 ரன்களில் வீழ்ந்தார்.

இதன் பின்னர் பதோனி, கிருஷ்ணப்பா கவுதம் ஜோடி போராடியது. தீபக் ஷாகர் வீசிய 17வது ஓவரில் கிருஷ்ணப்பா கவுதம் சிக்ஸர் விளாச 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய அடுத்த ஓவரில் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் தேவையாக இருந்தது. ஹங்கர்கேகர் வீசிய 19வது ஓவரில் 9 ரன்களை விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தை வைடாகவும், அடுத்த பந்தை நோபாலாகவும் தேஷ்பாண்டே வீச ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. 3வது பந்தில் ஆயுஷ் பதோனி (23 ரன்கள்), தோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கிருஷ்ணப்பா 17, மார்க்வுட் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மொயின் அலி 4 ஓவர்களை வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பவர்பிளேவில் அதிகம்

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே பவர்பிளேவில் 79 ரன்கள் விளாசியது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே பவர்பிளேவில் குவித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக 75 ரன்கள் சேர்த்திருந்தது.

3-வது முறையாக 100..

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக 3 முறை தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே.

மீண்டும் நாய்: சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டியின் போது நாய் ஆடுகளத்துக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது. அதேபோன்று நேற்று இரவு ஐபிஎல் போட்டியின் போதும் நாய் ஆடுகளத்துக்குள் புகுந்தது. சுமார் 4 நிமிடங்கள் அங்கும் இங்கும் போக்கு காட்டிய பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறியது. நாய் ஆடுகளத்துக்குள் புகுந்த போது அதை விரட்டும் முயற்சியில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும் ஈடுபட்டார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

தோனி 5,000

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தோனி 5 ஆயிரம் ரன்களை கடந்தார். ஐபிஎல் தொடரில் 236 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். மைல்கல் சாதனையை 20-வது ஓவரின் 2-வது பந்தில் எட்டினார் தோனி. இந்த சாதனையை படைத்துள்ள 5-வது வீரர் தோனி ஆவார். இதற்கு முன்னர் விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் வார்னர், டி வில்லியர்ஸ் ஆகியோரும் 5,000 ரன்களை கடந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x