Published : 04 Apr 2023 02:17 AM
Last Updated : 04 Apr 2023 02:17 AM
சென்னை: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.
கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு (3 ஆண்டுகளுக்குப் பிறகு) பிறகு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டி என்பதால் ஆரம்பம் முதலே சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன உணர்வை மைதானத்தில் உணர முடிந்தது. குறிப்பாக, தோனி பீவர் இன்றைய போட்டியில் சற்று கூடுதலாகவே தெரிந்தது. டாஸ் போடுவதற்கு களம் புகுந்தது முதல் கடைசிவரை மைதானத்தில் ஒலித்த ஒரே பெயர் தோனி... தோனி.. தோனி மட்டுமே.
டாஸ் சமயத்தில் டாஸை லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், "டார்கெட் எவ்வளவு எனத் தெரிந்துவிட்டால் போட்டியை அணுகுவது எங்களுக்கு எளிதாக இருக்கும்" எனக் கூறி பவுலிங் தேர்வு செய்வதாக சிம்பிளாக தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
அடுத்ததாக தோனி பெயர் உச்சரிக்கப்பட, மைதானம் அதிர்வின் உச்சத்துக்கே சென்றது. கமெண்டேட்டர் இயான் பிஷப் தோனியிடம் கேட்ட முதல் கேள்வி 'சிஎஸ்கே சேப்பாக்கத்திற்கு கம்பேக் கொடுத்தது'' பற்றித்தான்.
"2008ம் ஆண்டே ஐபிஎல் தொடங்கிவிட்டது. 15 சீசன் கடந்தாலும், 6-7 சீசன்கள்தான் சேப்பாக்கத்தில் முழுமையாக விளையாடியிருப்போம். அப்போதெல்லாம் இங்கே சில ஸ்டாண்ட்டுகள் காலியாக இருந்தன. ஆனால், இம்முறைதான் மைதானம் முழுமையாக நிரம்ப உள்ளது. ரசிகர்கள் சூழ இப்படியான ஒரு மைதானத்தில் விளையாடுவதே மகிழ்ச்சியும் பெருமையும் கொடுக்கிறது" என்று இயான் பிஷப் கேள்விக்கு தோனி பதில் கொடுக்க ரசிகர்களின் விசில் விண்ணை பிளந்தது.
ருதுராஜ் முதல் விக்கெட்டாக அவுட் ஆனது முதல் தோனி எப்போது ஆட வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் தோனி என்ற பெயரை ரசிகர்கள் உச்சரித்தனர். ஆனால், கடைசி ஓவரில் ஜடேஜா பெவிலியன் திரும்பியதும் ஸ்கிரீனில் தோனி முகம்காட்டப்படவே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தோனி என்ட்ரி கொடுக்கவும், மொபைல் லைட்டை ஆன் செய்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக, வந்த வேகத்தில் மார்க் வுட் வீசிய முதல் 2 பந்துகளையும் வானத்தில் பறக்கவிட்டார். இரண்டு சிக்ஸர்கள் எனத் தெறிக்கவிட்டார். 3வது பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க முயன்று அது ரவி பிஷ்னோய் கைக்குள் ஐக்கியமானதால் தோனி பெவிலியன் பக்கம் திரும்பிச் சென்றார். தோனி ஆடியது மூன்று பந்துகள்தான் என்றாலும் அதற்கான சமயத்தில் மைதானத்தில் ரசிகர்கள் ஸ்டேன்டிங் ஓவேஷன் மோடில் நின்றுகொண்டிருந்தனர்.
இந்தப்போட்டியில் 12 ரன்களை எடுத்ததன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT