Published : 03 Apr 2023 11:39 PM
Last Updated : 03 Apr 2023 11:39 PM

IPL 2023: CSK vs LSG | மொயின் அலியின் ஸ்பின் அட்டாக்கில் வீழ்ந்த லக்னோ - முதல் வெற்றியை பெற்ற சென்னை அணி

சென்னை: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து லக்னோவின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக ருதுராஜ் மிரட்டலில் சென்னை அணி பவர் ப்ளே முடிவில் 79 ரன்களைச் சேர்த்தது.

31 பந்துகளில் 57 ரன்களைச் சேர்த்த ருதுராஜை, ரவி பிஷ்னோய் அவுட்டாக்கினார். அவர் போன வேகத்திலேயே அடுத்த ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்த கான்வேவும் கிளம்பினார். இதனால் 11 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 120 ரன்களை சேர்த்தது.

அடுத்து வந்த ஷிவம் தூபே 3 சிக்ஸ்களை அடித்து அதிரடி காட்டினாலும் நிலைக்காமல் 27 ரன்களுடன் நடையக்கட்டினார். அடுத்து மொயின் அலி 19 ரன்களிலும், பென்ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும் விக்கெட்டாக சிஎஸ்கேவிடம் தொடக்கத்திலிருந்த வேகம் குறையத்தொடங்கியது. அம்பதி ராயுடு கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர், ஃபோர் மூலமாக நம்பிக்கை கொடுக்க ரவிந்திர ஜடேஜா அவருக்கு பக்கபலமாக நின்றார். ஆனால் ஜடேஜா 3 ரன்களில் செல்ல தோனி என்ட்ரி கொடுத்தார். வந்த வேகத்தில் 2 பந்துகளையும் வானத்தில் பறக்கவிட்டார். 3வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அது ரவி பிஷ்னோய் கைக்குள் ஐக்கியமானதால் தோனி பெவிலியன் பக்கம் திரும்பிச் சென்றார். இந்தப்போட்டியில் 12 ரன்களை எடுத்ததன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. அம்பதி ராயுடு 27 ரன்களுடனும், மிட்ஷெல் சாட்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான கைல் மேயர்ஸ் விளாசித் தள்ளினார். அதிலும் குறிப்பாக இம்பாக்ட் ப்ளேயராக அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட தேஷ் பாண்டேவின் 3வது ஓவரில் 18 ரன்களை எடுத்தார். இதில் 5 எக்ஸ்ட்ரா அடக்கம். ஒருபுறம் கே.எல்.ராகுலும், மற்றொருபுறம் கைல் மேயர்ஸும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 22 பந்துகளில் 53 ரன்களை குவித்த மேயர்ஸின் சூறாவளி ஆட்டத்திற்கு மொயின் அலி முடிவு கட்டினார். இதனால் 6 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த லக்னோ அணி 80 ரன்களை சேர்த்தது.

கே.எல்.ராகுல் 20 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்களிலும், குருணால் பாண்டியா 9 ரன்களிலும் நடையைக்கட்ட 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 105 ரன்களைச் சேர்த்தது லக்னோ. மார்கஸ் ஸ்டோனிஸூம் சோபிக்காமல் 21 ரன்களில் கிளம்பினார்.

நிக்கோலஸ் பூரன் 32 ரன்களுக்கு வெளியேற, இறுதிக்கட்டத்தில் வெற்றிக்காக ஆவேச கானுக்கு பதிலாக இம்பேக் ப்ளேயாராக களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் கிருஷ்ணப்பா கௌதமும் போராடினார். 6 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற கடினமான நிலையில் துஷார் தேஷ்பாண்டேவிடம் இறுதி ஓவரை ஒப்படைத்தார் தோனி. முதல் பந்தில் வொய்ட், பிறகு நோ பால் என ஒரு பந்துக்கு மூன்று ரன்கள் வழங்கினார் தேஷ்பாண்டே. எனினும், அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசிய அவர் ஆயுஷ் பதோனியை அவுட் ஆக்கினார்.

இதனால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவு 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணி இந்த சீசனில் பெறும் முதல் வெற்றி ஆகும். வெற்றிக்கு முக்கிய காரணமான மொயின் அலி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக தீபக் சாஹர் 50+ ரன்களை வாரி வழங்கினார். இதில் விக்கெட்டும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2021 முதல் விளையாடிய போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருப்பது இது 10வது முறை ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x