Published : 02 Apr 2023 11:28 AM
Last Updated : 02 Apr 2023 11:28 AM

மறக்குமா நெஞ்சம் | 2011-ல் இதே நாளில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி!

கோப்புப்படம்

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

இறுதிப் போட்டி மும்பை மாநகரின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டிருந்தனர். மறுபக்கம் நாடு முழுவதும் அன்றைய தினம் கோடான கோடி மக்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். அத்தனை பேருக்கும் இருந்த ஒரே எதிர்பார்ப்பு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது மட்டும் தான்.

அந்த எதிர்பார்ப்பை இந்திய அணி நிஜம் செய்தது. 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சேவாக் மற்றும் சச்சினை இந்திய அணி விரைவாக இழந்தது. கோலி, 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி முன்கூட்டியே பேட் செய்ய களம் கண்டார்.

கம்பீர் உடன் இணைந்து 109 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் தோனி. கம்பீர் 97 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த யுவராஜ் உடன் 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குலசேகரா வீசிய 48.2 பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் தோனி. அதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்று கெத்து காட்டினார்கள். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றது இந்தியா. ஆட்டநாயகன் விருதை தோனி வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x