Published : 02 Apr 2023 07:35 AM
Last Updated : 02 Apr 2023 07:35 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடு ஓவர்களில் அணியின் பேட்டிங் சரிவை சந்தித்ததே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 178 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியால் சிஎஸ்கே அணி 200-க்கும் அதிகமான ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 9 ஓவர்களில் சிஎஸ்கே வெறும் 78 ரன்களை மட்டும் சேர்த்து ஏமாற்றம் அளித்தது.
அம்பதி ராயுடு 12 பந்துகளை சந்தித்து 12 ரன்களும், ஷிவம் துபே 18 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்தது அணியின் ரன் குவிப்பில் பாதகத்தை உருவாக்கியது.
ஆட்டம் முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறும்போது, “ பனிப்பொழிவு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கின் போது நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் புத்திசாலித்தனமாக விளையாடினார். பந்தை கணித்து நேர்த்தியாக அடித்தார். அவர், ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ருதுராஜ், ஷாட்களை தேர்வு செய்த விதத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளித்தது. இளம் வீரர்கள் முன்னேறிச் செல்ல இது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் பந்து வீச்சில் வேகம் உள்ளது, காலப்போக்கில் சிறப்பாக செயல்படுவார். நோ-பால் என்பது பந்து வீச்சாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்கில் இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதிதான் களமிறங்கினோம். ஷிவம் துபே கூடுதல் தேர்வாக இருந்தார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT