Published : 01 Apr 2023 06:17 AM
Last Updated : 01 Apr 2023 06:17 AM

IPL 2023 | முதல் அயர்லாந்து வீரர் டு தோனியின் 200-வது சிக்ஸர் வரை: சென்னை - குஜராத் போட்டியின் ஹைலைட்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில், 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் விளாசினார். அல்ஸாரி ஜோசப் ஓவர்களில் 3 சிக்ஸர்களையும் ஜோஷ்வா லிட்டில், ஹர்திக் பாண்டியா ஆகியோரது ஓவர்களில் தலா 2 சிக்ஸர்களையும் யாஷ் தயாள், ரஷித் கான் ஆகியோரது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டு அசத்தி இருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

டேவன் கான்வே 1, மொயின் அலி 23, பென் ஸ்டோக்ஸ் 7, அம்பதி ராயுடு 12, வம் துபே 19, ரவீந்திர ஜடேஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய தோனி 7 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 14 ரன்னும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி சார்பில் மொகமது ஷமி, ரஷித் கான், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 11 ஓவர்களில் 100 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் அடுத்த 9 ஓவர்களில் அந்த அணியால் மேற்கொண்டு 78 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் ஷிவம் துபே 18 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சென்னை அணியின் ரன்குவிப்பில் இது தேக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிக்கட்டத்தில் தோனி மட்டையை சுழற்றியதால் 178 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது.

179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடியது. ரித்திமான் சாஹா 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ‘இம்பேக்ட் பிளேயர்’ விதியின் கீழ் வில்லியம்சனுக்கு பதிலாக களமிறங்கிய சாய் சுதர்சர்ன் 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் சேர்த்து அறிமுக வீரரான ஹங்கர்கேகர் பந்தில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார்.

மட்டையை சுழற்றிய தொடக்க வீரரான ஷுப்மன் கில் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசிய நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவையாக இருந்தது. 17-வது ஓவரை வீசிய தீபக் ஷாகர் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். ஹங்கர்கேகர் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட விஜய் சங்கர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 21 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

12 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் தீபக் ஷாகர் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாச 15 ரன்கள் கிடைத்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்து வைடானது. அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் டிவாட்டியா விரட்ட குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் டிவாட்டியா 15, ரஷித் கான் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிஸ்கே அணி சார்பில் ஹங்கர்கேகர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ‘இம்பேக்ட் பிளேயர்’ விதியின் கீழ் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே 3.2 ஓவர்கள் வீசி 51 ரன்களை தாரைவார்த்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

தோனி அடித்த 200-வது சிக்ஸர்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, லிட்டில் ஜோஷ் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி தோனி அடித்த 200-வது சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடி 200 சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இணைந்தார். இந்த வகையில் கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) 239 சிக்ஸர்கள், டி வில்லியர்ஸ் (ஆர்சிபி) 238, கெய்ரன் பொலார்டு (மும்பை) 223, விராட் கோலி (ஆர்சிபி) 218 சிக்ஸர்கள் விளாசி உள்ளனர்.

சிக்ஸரில் 2-வது இடம்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 9 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தை ராபின் உத்தப்பா, பிரண்டன் மெக்கலம், மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வகையில் முரளி விஜய் 11 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

315 நாட்களுக்குப் பிறகு...: 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே கேப்டன் தோனி சுமார் 315 நாட்களுக்குப் பிறகு இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

‘ஷமி 100’: சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் மொகமது ஷமி, டேவன் கான்வேவை போல்டாக்கினார். ஐபிஎல் தொடரில் மொகமது ஷமி கைப்பற்றிய
100-வது விக்கெட் இதுவாகும்.

முதல் அயர்லாந்து வீரர்.. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பந்து வீச்சாளராக செயல்பட்ட அயர்லாந்தை சேர்ந்த ஜோஷ் லிட்டில் இந்த சீசனில் குஜராத் அணிக்காக நேற்று களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டுள்ள முதல் அயர்லாந்து வீரர் ஜோஷ் லிட்டில் ஆவார். தனது முதல் ஓவரில் ஜோஷ் லிட்டில் 15 ரன்களை வழங்கினார்.

‘புதிய விதி ஆடம்பரமானது’: டாஸ் நிகழ்வின் போது தோனி கூறுகையில், நாங்களும் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம். இந்த தொடருக்காக சிறப்பாக தயாராகி உள்ளோம். பயிற்சிக்காக முன்னதாகவே இணைந்தது உதவியாக இருந்தது. இம்பேக்ட் பிளேயர் விதி ஆடம்பரமானது. 14 ஓவர்களுக்குள் எந்த நேரத்திலும் இந்த விதியை பயன்படுத்தலாம் என்பதால் முடிவு எடுப்பது சற்று எளிதாக இருக்கும். இந்த விதியால் ஆல்ரவுண்டரின் செல்வாக்கு சற்று குறையும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x