Published : 03 Jul 2014 06:01 PM
Last Updated : 03 Jul 2014 06:01 PM
சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்று கூறிய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா மீது ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொற்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரை சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று பார்ப்பது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த சனிக்கிழமை அன்று சச்சின், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் ராயல் பாக்ஸில் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர்.
ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்து வந்தபோது, அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் டேவிட் பெக்காம் அருகில் வரும் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்டதற்கு 'தெரியாது' என்று பதில் அளித்து ரசிகர்களின் கோபாவேசக் கருத்துகளுக்கு ஆளாகியுள்ளார்.
மரியா ஷரபோவாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்குச் சென்று, அவரது இந்தக் கருத்திற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் உலகிலிருந்து பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் அவரை தாறுமாறாகக் கிழித்துள்ளனர். கடும் கெட்டவார்த்தைகளுடன் கூடிய கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றை விடுத்து சுவையான சில ட்வீட்களைப் பார்ப்போம்: 'யார் இந்த மரியா ஷரபோவா' என்ற அர்த்தம் கொடுக்கும் சொற்பதம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.
'சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை என்றால், அவர் ஒரு கிரிக்கெட் நாத்திகவாதி'; 'சச்சின் களத்தில் நின்ற ஆண்டுகள்கூட ஷரபோவா வயது இருக்காது. அதற்காக கடவுளைச் சிறுமைப்படுத்தலாமா?' என்கிற ரீதியில் பல ட்வீட்கள் வலம் வந்துள்ளன.
மேலும், ஆயிரக்கணக்கானோர் ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைந்து, 'சச்சின்' 'சச்சின்' 'சச்சின்' என்று பக்கம் முழுதையும் அவர் பெயரைக் குறிப்பிட்டு நிரப்பியுள்ளனர்.
ஒருவர் மிக நகைச்சுவையாக மரியா ஷரபோவா ரசிகர்களிடம் வசை வாங்கிக்கட்டிக் கொள்வதைப் பார்த்து, விக்கிலீக்ஸ் அசாஞ்சே 'இப்போது எனக்கு சச்சினைத் தெரிந்து விட்டது' என்று கூறியதாக கிண்டல் செய்துள்ளார்.
சர் ரவீந்தர் ஜடேஜா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பதிவில், மரியா ஷரபோவா டென்னிஸ் வலை மீது ஷூவை வைத்திருக்கும் படத்தை வெளியிட்டு, சச்சின் டெண்டுல்கர் மைதானத்தைத் தொட்டுக் கும்பிடும் படத்தையும் வெளியிட்டு, 'டியர் மரியா ஷரபோவா இதுதான் சச்சின்' என்று பதிவிடப்பட்டுள்ளது.
மற்றொரு ட்வீட்டில் "நீ ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கும் சத்தம் எழுப்புகிறாய், ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கு ரசிகர்கள் சப்தம் எழுப்புகின்றனர். அவர் கடவுள், நீ சாதாரண பிளேயர்' என்று பதிவிடப்பட்டுள்ளது.
வசைகள், கேலி - கிண்டல்களுக்கு இடையே ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் நிறைய ட்வீட்கள் வந்துள்ளன. 'இதுவல்லாமல் ஷரபோவாவுக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை இதனால் ஆகப்போவதென்ன' என்று சில நடுநிலை பதிவர்களும் கூறியுள்ளனர்.
ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது, சச்சின் டெண்டுல்கரை இவ்வளவு நாயக வழிபாடு செய்வது மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதே அது.
ட்வீட் செய்பவர்கள் படித்தவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஷரபோவா அறியாமையில் கூறியதை இவ்வளவு பெரிதுபடுத்தி அவரை வசை பாடுவது முறையல்ல என்றே தோன்றுகிறது. உலகில் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியவேண்டிய அவசியமில்லை. ஏன் சிலருக்கு சிலரைக்கூட தெரியவேண்டியத் தேவையில்லை.
இந்தியாவில் பல தொகுதிகளில் வென்ற எம்.எல்.ஏ., எம்.பிக்களையே மக்களுக்குத் தெரிவதில்லை, அவர்களுக்கும் தங்கள் தொகுதியே தெரிவதில்லை.
இதற்கெல்லாம் எழுச்சியுறாத நம் மக்கள் செல்வம், சச்சினைத் தெரியவில்லை என்று ஒரு ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை கூறியதற்கு இவ்வளவு எழுச்சியுடன் ஆர்பாட்டம் செய்வது தேவையா என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT