Published : 31 Mar 2023 11:42 PM
Last Updated : 31 Mar 2023 11:42 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 179 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் - சஹா இணை துவக்கம் கொடுத்தது. சஹா நான்கு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்ததாலும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் சாய் சுதர்சனும் 22 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். இந்த இருவர் விக்கெட்டையும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்திருந்தார். இருவருமே கேட்ச் ஆகி வெளியேறினர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா செட்டில் ஆகும் முனைப்போடு ஆட, அவரை போல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார் ஜடேஜா. இதனால் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாண்டியா. அதேநேரம் மறுமுனையில் இருந்த சுப்மன் கில் அரை சதம் கடந்து பொறுப்போடு விளையாடி வந்தார். துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் பந்தை சிக்ஸுக்கு தூக்கியடிக்க முயன்று கேட்ச் ஆனார் கில். அவர், 36 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் வெற்றிக்காக விஜய் சங்கர் மற்றும் ராகுல் தெவட்டியா இணை போராடியது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த விஜய் சங்கர், ராஜ்வர்தன் ஓவரில் கேட்ச் ஆக ஆட்டம் விறுவிறுப்பானது.
இறுதி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட தெவட்டியா சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தர். நான்கு பந்துகள் மீதமிருக்க ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்.
சிஎஸ்கே இன்னிங்ஸ்: சென்னை அணிக்காக கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கான்வே, 1 ரன் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மொயின் அலி, 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
பவர்பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ், 7 ரன்களில் ரஷீத் கான் சுழலில் சிக்கி வெளியேறினார். இருந்தும் மறுமுனையில் ருதுராஜ் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ராயுடு, 12 ரன்கள் எடுத்து லிட்டில் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
11 ஓவர்களில் 100 ரன்கள் எட்டியது சென்னை. அதன் பிறகு சென்னை அணியின் ரன் குவிப்பு ஸ்லோவானது. ருதுராஜ், 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஜடேஜா, 1 ரன் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு தோனி களம் கண்டார். தூபே, 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்தது சென்னை அணி. ரஷீத் கான், ஷமி மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டி வருகிறது. தோனி, 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அவர் பவுண்டரி ஒன்றும், சிக்ஸர் ஒன்றும் பறக்கவிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT