Published : 31 Mar 2023 06:01 PM
Last Updated : 31 Mar 2023 06:01 PM
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண சென்றிருந்தேன். 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை. 100 மில்லி லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும், குளிர் பானங்கள் 50 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சமோசா 50 முதல் 80 ரூபாய்க்கும், சாம்பார் மற்றும் தயிர் சாதம் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்தப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும். அடுத்த வாரம் தொடங்கக்கூடிய ஐபிஎல் போட்டிகளின்போது கூடுதல் விலைக்கு தண்ணீர், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் மார்ச் 23ல் புகார் மனு அளித்துள்ளேன். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது சட்டவிரோதமானது" என்று தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தரப்பு வழக்கறிஞர், "மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவு பொருட்கள் வழங்கினால் மைதானத்திற்குள் வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பிளாஸ்டிக்கில் வழங்கப்படுவது இல்லை" என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் பிசிசிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT