Published : 31 Mar 2023 04:10 PM
Last Updated : 31 Mar 2023 04:10 PM

சிஎஸ்கே-வும் இல்லை, குஜராத் டைட்டன்ஸும் இல்லை... யார் சாம்பியன்? - பான்டிங்கின் விநோத தேர்வு

பான்டிங் | கோப்புப்படம்

ஐபிஎல் 2023 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என தனது தேர்வாக சொல்லியுள்ளார். அதில் சிஎஸ்கே அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இல்லை.

ஐபிஎல் தொடங்கி விட்டது, கிரிக்கெட் நீங்கலாக செலிபிரிட்டி பிளேயர்கள், நட்சத்திர வீரர்கள் உள்ளிட்ட கதைகள் பெருகி வழியும் நேரம். கிரிக்கெட் பற்றியும் அதன் நுட்பங்கள், நுணுக்கங்கள், அதன் கலைத்தன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு தோனி எப்படி கைத்தட்டினார், தோனி எப்படி நடந்தார்? கோலி எப்படி சிரித்தார், கோலி எப்படி கோபமடைந்தார், ரோஹித் சர்மாவின் ரியாக்‌ஷன் என்ன என்பது போன்ற செய்திகள் கொடிகட்டி பறக்கக் கூடிய காலகட்டம் என்பதோடு, எந்த அணி ஜெயிக்கும்? அன்றைய லெவன் என்ன? யார் உட்கார வைக்கப்படுவார்கள்? போன்ற ஹேஷ்யங்களே செய்திகளாக வலம் வரத் தொடங்கி 2 மாத காலத்திற்கு ஓடும்.

ரசிகர்களுக்கும் மக்களுக்கும் இது போன்ற செய்திகள்தான் கிளுகிளுப்பாக தோன்றுகின்றன. நல்ல யார்க்கரையோ, நல்ல ஒரு மரபான கவர் ட்ரைவையோ, நல்ல ஒரு களவியூகத்தையோ ரசித்துப் பாராட்டும் செய்திகள் அவர்களுக்கு உவப்பளிப்பதில்லை. இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் தனது ‘சாம்பியன்’ ஹேஷ்யத்தை வெளியிட்டுள்ளார்:

ஐசிசி ரிவ்யூவின் சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய பான்டிங், இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கருதும் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் குஜராத் டைட்டன்ஸுடன் தொடங்கினார், ஆனால் அவரது கவனம் 2008 சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மீது இருந்தது. அவர்கள் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது தங்கள் 14 ஆண்டுகால சாதனையை அதாவது கோப்பையை மீண்டும் வெல்லும் கனவுக்கு அருகில் வந்தனர்.

“கடந்த ஆண்டு குஜராத் (டைட்டன்ஸ்) அணி அற்புதமாக இருந்தது. அதுவே ஒரு புத்தம் புதிய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்றொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உண்மையிலேயே ஒரு நல்ல அணியைப் பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு, ஏலத்திற்கு பிறகு, அவர்களால் ஒரு நல்ல அணியை ஒன்றிணைக்க முடிந்தது என்பதில் ராஜஸ்தான் அணி எங்களை மிகவும் ஈர்த்தது. இந்த ஆண்டு மீண்டும் அதை உருவாக்கியுள்ளனர். ஆகவே கோப்பையை வெல்லும் சாதக அணியில் ராஜஸ்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மிக ப்பெரிய தொடர் என்பதால் யார் வெல்வார்கள் என்பதை கூறுவது கடினமே. ஆனாலும் அணியின் பலத்தை பார்க்கும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்” என்றார் பான்டிங்.

ஏப்ரல் 2-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x