Last Updated : 30 Mar, 2023 08:29 AM

 

Published : 30 Mar 2023 08:29 AM
Last Updated : 30 Mar 2023 08:29 AM

பும்ரா இல்லாத மும்பை இந்தியன்ஸ்: பலம், பலவீனம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் மோசமாக அமைந்தது. லீக் சுற்றில் 10 தோல்வி, 4 வெற்றிகளுடன் அந்த அணி கடைசி இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் 15 சீசன்களிலும் மும்பை அணியின் மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அதேவேளையில் கடந்த சீசன் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் சரியாக அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் அந்த சீசனை நிறைவு செய்திருந்தார் ரோகித் சர்மா. மும்பை அணியின் ரன் இயந்திரமாக கருதப்படும் அவர், 19.14 சராசரியுடன் 268 ரன்கள் மட்டுமே சேர்த்து கடும் ஏமாற்றம் அளித்தார்.

இந்த சீசனில் அந்த அணி எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் பலரை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

அதேவேளையில் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்த சீசனை எதிர்கொள்கிறது மும்பை அணி. முதுகு வலி காயத்துக்கு பும்ரா அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்க்கக்கூடும்.

பலம்: உலகின் நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 3 ஆட்டங்களிலும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தார். எனினும் தொழில்முறை டி 20 போட்டி என்பதால், ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேம்பட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். நடுவரிசை பேட்டிங்கில் அவருடன் இந்தியாவின் திலக் வர்மா, தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பலம் சேர்க்கக்கூடும்.

தொடக்க பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறது. பின்வரிசை பேட்டிங்கை பலப்படுத்த டிம் டேவிட் ஆயத்தமாக உள்ளார். இவர்களுடன் ரூ.17.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆல்ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் மீதும்அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர்,கெய்ரன் பொலார்டுக்கு மாற்றாக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். பொலார்டு இந்த சீசன் முதல் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சரால் எதிரணிக்கு அதிகம் சேதம் விளைவிக்க முடியும் என மும்பை அணி நம்பிக்கை கொண்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரன் டோர்ஃப் செயல்படக்கூடும். இவர், பிக்பாஷ் டி 20 தொடரில் சாம்பியன்பட்டம் வென்ற பெர்த் அணியில் 14 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்கள் வேட்டையாடி இருந்தார்.

பலவீனம்: மும்பை இந்தியன்ஸ் தனது எதிர்கால அணியை கட்டமைக்கும் கட்டத்தில் உள்ளது. வீரர்களின் மெகா ஏலத்துக்குப் பிறகு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதிக இளம் வீரர்களை கொண்ட இளம் பேட்டிங் குழுவுக்கு இந்த சீசன் சவாலாக இருக்கக்கூடும். பும்ரா இடத்தை மற்றொரு வீரர் நிரப்புவது கடினம். ஆஸ்திரேலியாவின் ஜே ஜே ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாதது குறையாக உள்ளது. இளம் வீரரான குமார் கார்த்திகேயா கடந்த ஆண்டு விளையாடிய 4 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினார், ஆனால் மும்பை அணியின் நம்பகத்தன்மை முற்றிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் கிரீன் போன்ற ஆல்-ரவுண்டர்கள் மீதே இருக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க 34 வயதான சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை
ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவ்லா கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

வாய்ப்புகள்

  • சொந்த மைதானமான வான்கடேவில் இம்முறை மும்பை அணி 7 ஆட்டங்களில் விளையாட உள்ளது. கடந்த சீசனில் வெறும் 4 ஆட்டங்களை மட்டுமே வான்கடேவில் விளையாடிய மும்பை அணி அதில் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது. இம்முறை சொந்த மைதான சாதங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் மும்பை முனைப்பு காட்டக்கூடும்.
  • டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன் உள்ளிட்ட இளம் வீரர்கள் தங்களது திறனை நிரூபிக்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கக்கூடும்.
  • கேப்டன் ரோஹித் சர்மா, அதிக அழுத்தம் கொண்ட ஆட்டங்களை மைதானத்தில் நிரம்பி வழியும் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே கையாளும் விதமும், அதன் வாயிலாக வெளிப்படும் தலைமைப் பண்பும் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்த உதவும்.

அச்சுறுத்தல்… சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ், கேமரூன் கிரீன் ஆகியோரது மட்டை வீச்சு எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். இதேபோன்று பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

மும்பை இந்தியன்ஸ் படை: ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டெவால்ட் ப்ரீவிஸ்,
இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, டுவான் ஜேன்சன், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ராகவ் கோயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x