Published : 05 Sep 2017 03:52 PM
Last Updated : 05 Sep 2017 03:52 PM
லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு முன்னிலை அணி அவ்வாறு நடந்து கொண்டது இளம் வீரரான தனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்ததாக மிகவும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் பிரையன் லாரா.
1980களிலும் 90-களின் ஆரம்பங்களிலும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் உலகை ஆதிக்கம் செலுத்தினாலும் சில வேளைகளில், “வீர்ர்கள் ஆடிய விதம் ஒரு ஆட்டத்தை எப்படி ஆடக்கூடாதோ அந்த உணர்வில் இருந்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது” என்றார்.
குறிப்பாக 1980-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற மே.இ.தீவுகள் ஆடிய டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் அப்போது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இன்று பிரையன் லாரா அதனைக் குறை கூறினாலும் அந்தத் தொடரில் நியூஸிலாந்து நடுவர்கள் நடந்து கொண்ட விதம் எந்த ஒரு பொறுமைசாலியையும் நிலைதடுமாறச் செய்யக்கூடியதுதான்.
ரிச்சர்ட் ஹாட்லிக்கு மட்டும் ஒரு இன்னிங்ஸில் 9 அவுட்கள் தரப்படவில்லை என்பது ரெக்கார்டில் உள்ளது. ஆனால் லாரா அப்போதைய மே.இ.தீவுகள் வீரர்களின் நடத்தையை இன்றைய பார்வையிலிருந்து அலசுகிறார்.
கோலின் கிராஃப்ட் ஓடி வந்து நடுவரின் தோளில் இடித்தார், மைக்கேல் ஹோல்டிங் ஸ்டம்பை எட்டி உதைத்தார். அது சர்ச்சைக்குரிய நடத்தைதான் இருந்தாலும் நடுவர் மோசடிகளைத் தட்டிக் கேட்பது யார்? ஆனால் லாராவுக்கு கொலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் நடத்தைப் பிடிக்கவில்லை. இந்தத் தொடரோடு 1988 பாகிஸ்தான் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 1990ம் ஆண்டு தொடர்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு அப்போதைய மே.இ.தீவுகள் அணியின் நடத்தை அணுகுமுறைகளை விளாசினார் பிரையன் லாரா:
“நான் மே.இ.தீவுகள் அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நுழைந்தேன். 1980-லிருந்து 15 ஆண்டுகள் மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. இதற்கு முன்பாகத்தான் கொலின் கிராப்ஃட் நியூஸிலாந்து நடுவர் பிரெட் குடாலை மோதித்தள்ளினார். மைக்கேல் ஹோல்டிங் தான் ஒருபோதும் கிரிக்கெட் வீரனல்ல, கால்பந்து வீரன் என்பது போல் ஸ்டம்புகளை எட்டி உதைத்தார். அந்தக் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின.
மே.இ.தீவுகள் வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் அந்தக் காலக்கட்டம் பெருமைக்குரியதாக இல்லை. சில நடத்தைகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. 1988-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இம்ரான் கான் பந்தில் விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு எல்.பி. தீர்ப்பில் அவுட் தரப்படாமல் இருந்தது அவரது அதிர்ஷ்டம், அப்துல் காதிர் பந்தில் ஜெஃப் டியூஜான் கேட்ச் முறையீட்டுக்கு தப்பித்தது அதிர்ஷ்டம். வீரர்கள் தாங்கள் அவுட் என்று தெரிந்தால் தாங்களே வெளியேற வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்ற பிரையன் லாரா, 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மே.இ.தீவுகள் நடத்தையை சிறிதும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
“அனைவரும் கூறினர் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பேயில்லை என்று. ஆனால் ஜமைக்காவில் வென்றனர். டிரினிடாடில் மழைக்குப் பிறகும் கூட சிறிய இலக்கை விரட்டி வெல்லக்கூடிய அளவுக்கு கால அவகாசம் இருக்கவே செய்தது. ஆனால் மைதான பராமரிப்பாளர்களும் மைதான நிர்வாக அதிகாரிகளும் ஆட்ட நாயகன் விருதுக்காக போராடியது போல்தான் இருந்தது அவர்கள் செய்த காரியம். தாமதப்படுத்திக் கொண்டே சென்றனர், அதாவது இந்தப் போட்டி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக செயல்பட்டது போல் மந்தமாக நடந்து கொண்டனர்.
ஆனால் 2 மணி நேர ஆட்டம் சாத்தியமானது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் கால அவகாசம் இருந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்தோம் ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களை மட்டுமே வீசி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தினோம். ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களையே வீசியதால் வானிலை மோசமடைய வெளிச்சமில்லாமல் போனது, இதனையடுத்து கிரகாம் கூச் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்றார். (151 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக இங்கிலாந்து 120/5 என்று முடிந்து ஆட்டம் டிரா ஆன டெஸ்ட் போட்டியை லாரா குறிப்பிடுகிறார்).’’
ஒரு இளம் மே.இ.தீவுகள் வீரரான எனக்கு இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மே.இ.தீவுகள் அணி தோல்வியைத் தவிர்க்க காலத்தை விரயம் செய்ததைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. ஆட்டத்தை எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடவில்லை.
நான் அந்தப் போட்டியில் 12-வது வீரர். எனக்குக் குற்ற உணர்வாக இருந்தது. நான் மைதானத்துக்குள் ஷுலேஸ்கள், வாழைப்பழம், தண்ணீர், இருமல் மாத்திரைகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தேன் (தாமதப்படுத்துவதற்காக). ஆனால் எனக்கு உண்மையில் தர்மசங்கடமாக இருந்தது.
இன்னொரு சம்பவம் அதே தொடரில்.. பார்படாஸில் அடுத்த டெஸ்ட், இதுவும் சவாலாக ஆடப்பட்ட டெஸ்ட் போட்டி, ராப் பெய்லி ஆடிக்கொண்டிருக்கிறார், அவர் லெக் திசையில் ஒரு பந்தை ஆடினார், ஜெஃப் டியூஜான் (வி.கீ) டைவ் அடித்து பந்தை பிடிக்கிறார். அப்போது கேட்ச் முறையீடு எழுந்தது, முதல் ஸ்லிப்பிலிருந்து பீல்டர் ஒருவர் (நான் அவர் பெயரைக் கூறப்போவதில்லை) நடுவரிடம் சென்று அவுட் என்கிறார். நடுவர் யோசிக்கிறார் யோசிக்கிறார் யோசித்து யோசித்து கடைசியில் அவுட் என்று கையை உயர்த்துகிறார். பெய்லி வெளியேறுகிறார், ஆனால் அது உண்மையில் அவுட் இல்லை. நாட் அவுட்.
இங்கிலாந்து அந்த டெஸ்ட் போட்டியை இழந்து மே.இ.தீவுகள் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றுகிறது.
ஒரு மேற்கிந்திய வீரனாக எனக்கு இது வேதனை அளிக்கிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு தருணமாகும். உலகின் தலைசிறந்த அணியான மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை வித்தியாசமாக ஆட வேண்டும் என்றே நான் உணர்ந்தேன்.
இப்படி வெற்றி பெற்றதனால் அணியின் உண்மையான பலவீனம் மறைக்கப்பட்டது, தோற்றிருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். 1995-ம் ஆண்டு நாங்கள் தோற்றபோது மே.இ.தீவுகள் வீழ்ச்சி தொடங்கியதாக அனைவரும் கூறினார்கள், ஆனால் கிரேட் பிளேயர்கள் ஆடிய காலத்திலேயே சரிவு கண்டோம் என்றே நான் உணர்கிறேன்.
1988, 1990-ல் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றிருந்தால் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டைச் சரிவிலிருந்து காப்பாற்ற அப்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். மூத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்கள், ஆனால் இது நடக்கவில்லை”
இவ்வாறு கிரேட் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது சாட்டையடி விளாசல் உரை நிகழ்த்தினார் பிரையன் லாரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT