Published : 28 Mar 2023 04:36 PM
Last Updated : 28 Mar 2023 04:36 PM
பெங்களூரு: கடந்த ஆண்டு தங்கள் அணியின் முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் தங்களை அதில் முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு கொடுத்துள்ளது ஆர்சிபி அணி. இந்நிலையில், உருக்கமான பதிவு ஒன்றை டிவில்லியர்ஸ் பதிவு செய்துள்ளார்.
“மார்ச் 26, 2023 அன்று நானும், கிறிஸ் கெயிலும் ஆர்சிபி அணியின் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்தோம். எங்கள் ஜெர்சி எண்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மைதானத்தின் படிக்கட்டுகளில் பல நேரங்களில் நான் எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வுடன் கடந்து வந்துள்ளேன். ஆனால், இன்று என் மனைவி, பிள்ளைகளுடன் இதே படிக்கட்டுகளில் வரும் போது வேறுவிதமாக உணர்கிறேன். வித்தியாசமான மன நிலையில் இப்போது வருவது எனக்கே விசித்திரமாக இருந்தது.
மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருக்க டிரெஸ்ஸிங் ரூமின் பால்கனியில் நான் நுழைந்தபோது என் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. ஏபிடி என எழும் கோஷம் இந்த முறை எனக்கு வேறு விதமான அனுபவத்தை கொடுக்கிறது. 2003 முதல் இந்தியாவில் நான் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் எண்ணி பார்க்கையில் பல சிறப்பான நினைவுகள் என்னை பின்னோக்கி ஈர்க்கின்றன. இந்த நாட்டுடனும், அற்புதமான இந்த மக்களுடனும் எனக்கு ஆழமான பிணைப்பு உண்டு. அதற்காக நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். அணியின் வீரர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக விராட் கோலிக்கு. ஆர்சிபி-க்கு நன்றி. நன்றி பெங்களூரு” என டிவியல்லர் தெரிவித்துள்ளார்.
டிவில்லியர்ஸ், 2011 முதல் 2021 வரையில் ஆர்சிபி அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 144 இன்னிங்ஸ் விளையாடி 4491 ரன்கள் அவர் ஆர்சிபி அணிக்காக எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT