Published : 25 Mar 2023 01:04 PM
Last Updated : 25 Mar 2023 01:04 PM

பிரிதிவி ஷா யார், எப்படிப்பட்ட பேட்டர் என்பது இந்த ஐபிஎல் சீசனில் புரியும்: ரிக்கி பாண்டிங்

இந்திய அணித்தேர்வு ரகசியக் குறியீட்டின் புரியாத இன்னொரு புதிர்தான் பிரிதிவி ஷா. ஏன் இவரை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பது இன்னமும் கூட புதிர்தான். இவரிடம் லாரா, சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகிய மும்மூர்த்திகளின் கலவையைக் கண்டவர் ரவி சாஸ்திரி. இப்போது என்ன ஆயிற்று? இந்தக் கலவை கரைந்து போய் விட்டதா? இல்லை ஒழிக்கப்படுகின்றாரா? எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதுமில்லை, கேட்டாலும் பதிலும் கிடைப்பதில்லை. பிசிசிஐ-யின் ‘வெளிப்படைத்தன்மை’ அத்தகையது.

இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடர் இந்த மாத இறுதியில் தொடங்குகின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரிதிவி ஷா, ஏற்கெனவே டேவிட் வார்னருடன் சேர்ந்து சிலபல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். இதுவரை பிரிதிவி ஷா மொத்தம் 63 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1588 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 25 தான். 99 அதிகபட்ச ஸ்கோர். ஸ்ட்ரைக் ரேட் 147. 14 அரைசதங்களை அடித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் வெறும் 283 ரன்களையே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 152.97 என்று வைத்துள்ளார். ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த 2வது வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவரது பலவீனம் இன்ஸ்விங்கர் மற்றும் ஸ்பின் பந்து வீச்சு, பீல்டிங்கில் வேகமாக இயங்க மாட்டார். இவரது திறமை விதந்தோதப்படும் அளவுக்கு அவரது ஆட்டம் இதுவரை இருக்கவில்லை என்பதே இவரது அசாதகம். பல நேரங்களில் தன் விக்கெட்டை தூக்கி எறிந்து விட்டுச் செல்வார். சூழ்நிலைக்கேற்ப ஆட மாட்டார்.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இவர் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்துள்ளார். அவர் கூறியதாவது:

“முன்னெப்போதையும் விட பயிற்சியில் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறப்பாகவும் ஆடுகின்றார். இதற்கு முன்னால் பார்த்ததை விட அவரது உடல் வடிவமும் முன்பை விட நன்றாக உள்ளது. அன்றொரு நாள் அவரிடம் அவரது அணுகுமுறை பற்றி பேசினேன். ஒன்று மட்டும் புரிந்தது இந்த ஐபிஎல் சீசன் இவருக்கு பெரிதாக அமையும் என்றே கருதுகிறேன்.

இந்த ஆண்டு இவரது கண்களில் புதிய வெளிச்சம் தெரிகின்றது. அதாவது இந்த முறை முன்னெப்போதையும் விட தீராத அவாவிலும் வெறியிலும் இருக்கிறார். அவரது திறமையை வைத்துப் பார்க்கும் போது உண்மையான பிரிதிவி ஷா-வை இந்த சீசனில் நீங்கள் காணலாம்.

நான் எங்கள் வீரர்களிடம் வலியுறுத்துவது என்னவெனில், ‘சோம்பேறித்தனம் எனக்குப் பிடிக்காது’ என்பதையே. தங்களிடம் இருக்கும் திறமையை வீணடிக்கும் வீரர்களை எனக்குப் பிடிக்காது. இதை நான் அடிக்கடி வலியுறுத்துவேன். எனவே வீரர்கள் கடினமாக உழைக்காவிட்டால் அவர்களிடம் இருக்கும் திறமை வெளிப்பட வழியே இல்லை. அப்படி அவர்கள் மாறவில்லை எனில் அவர்களை மாற்றுவதுதான் என் வேலை. இந்த சீசனில் பிரிதிவி ஷாவிடம் ஏதோ ஒன்று கிளிக் ஆகும் போல் தெரிகிறது. அவர் நல்ல நிலைமையில் இப்போது உள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பரந்துபட்ட ஒரு பார்வை இல்லை எனில் உண்மையான உலகில் யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே என் பணி அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்குவதுதான். நல்ல மனிதர்களாகவும் அவர்களை பார்க்க ஆசைப்படுகின்றேன். நல்ல நபராக இருப்பது நல்ல வீரரை உருவாக்கும். வெளி உலகில் உங்கள் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தவில்லை எனில் களத்திலும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. இதைத்தான் நான் இவர்களுக்குப் புகட்ட விரும்புகின்றேன்” என்றார் ரிக்கி பாண்டிங்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனில் ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் ஆடுகின்றனர். ரிஷப் பண்ட் இல்லாததால் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், கடந்த சீசனில் 5வது இடத்தில் முடிந்த டெல்லி கேப்பிடல்ஸ் இந்த முறை இறுதியை நோக்கி அடியெடுத்து வைக்குமா என்பது போகப்போகத் தெரியும். அக்சர் படேல் துணைக் கேப்டன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x