

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பகிர்ந்து உறுதி செய்துள்ளது சென்னை அணி நிர்வாகம். ‘சென்னை 600028’ படத்தின் பாடலை இதற்காக பயன்படுத்தியுள்ளது சிஎஸ்கே அணி.
வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடுகின்றன. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் அணியுடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். அதற்கு உதாரணம் 2019 ஒருநாள் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை சொல்லலாம். அதுமட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இவர்.
ஐபிஎல் அரங்கில் 43 போட்டிகளில் ஸ்டோக்ஸ் விளையாடி இதுவரை உள்ளார். கடந்த 2017 முதல் அவர் இதில் விளையாடி வருகிறார். மொத்தமாக 920 ரன்கள் மற்றும் 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2 சதம், 2 அரைசதம் மற்றும் 7 முறை 30+ ரன்களை களத்தில் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 134.50. 79 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஸ்டோக்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டோக்ஸ் விளையாடி உள்ளார்.