Published : 24 Mar 2023 05:26 AM
Last Updated : 24 Mar 2023 05:26 AM
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களின் காயங்கள் கவலை அளிக்கிறது. ஆனால் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்திய வீரர்களில் எவரேனும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்களை தவறவிடுவது சந்தேகமே என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் ஸ்ரேயஸ் ஐயர் வரை காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வரும் 31-ம் தேதி ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. சுமார்2 மாத காலம் நடைபெறும் இந்தகிரிக்கெட் திருவிழாவில் பல்வேறு அணிகளுக்காக இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஐபிஎல் தொடர் மே 28-ம் தேதி முடிவடையும் நிலையில் ஜூன் 7-ம் தேதி நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள இந்திய அணி லண்டன் புறப்பட்டுச் செல்கிறது.
இதனால் வீரர்களின் பணிச்சுமை பேசுபொருளாகி உள்ளது. வரும் அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக முக்கிய வீரர்கள் காயம் அடைந்துவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கவனம்செலுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
இந்திய அணி வீரர்களின் காயங்கள் கவலை அளிக்கிறது. காயம் காரணமாக விளையாடும் லெவனில் இடம் பெறும் வீரர்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் அவர்கள் தங்களது உடலை கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் ஏதேனும் அசவுகரியமாக உணர்ந்தால் தங்களது அணி நிர்வாகத்திடம் பேசி, ஒன்று அல்லது இரு ஆட்டங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது நிகழுமா என்பது சந்தேகம்தான்.
உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு வீரர்களின் பணிச்சுமை தொடர்பாக ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வரம்புக்குட்பட்ட சில குறிப்புகளை வழங்கிஉள்ளது. இப்போது அனைத்தும் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம்தான் உள்ளது. ஏனெனில் அவர்கள்தான் வீரர்களை வாங்கி உள்ளனர்.
வீரர்களை நிர்வகிப்பதில் அதிககவனம் செலுத்துகிறோம். இதனால் தான் குறிப்பிட்ட நேரங்களில் வீரர்களுக்கு ஓய்வு வழங்குகிறோம். எங்கள் தரப்பில் இருந்து காயங்களை கையாள்வதில் முடிந்தவரை சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் வீரர்கள் மீண்டும் ஏன் காயம் அடைகிறார்கள் என்பது பற்றி விளக்கம் கொடுக்க நான்நிபுணர் இல்லை. பிசிசிஐ மருத்துவக்குழு இதையெல்லாம் ஆராய்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த 15 வீரர்கள் தயாராக இருப்பார்கள். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT