Published : 22 Mar 2023 10:13 PM
Last Updated : 22 Mar 2023 10:13 PM
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடியது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தது.
இருவரும் இணைந்து முதல் 10 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்தனர். இந்த இணையை 11-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார். ட்ராவிஸ் ஹெட் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மிட்செல் மார்ஷை 47 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா.
டேவிட் வார்னர் 23 ரன்களிலும், மார்னஸ் லாபுசாக்னே 28 ரன்களிலும் கிளம்ப 30 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (25), அலேக்ஸ் கேரி (38) அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் ஆடினாலும் அவர்களும் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்காததால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 269 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஹம்மத் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - ரோஹித் ஷர்மா மோசமில்லாத தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 16 பந்துகளில் 30 ரன்களை சேர்த்திருந்த ரோஹித் ஷர்மா சேன் அபோட் அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் 37 ரன்களுடன் சுப்மன் கில்லும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அடுத்து வந்த விராட் கோலி - கே.எல்.ராகுல் நல்லதொரு பாட்னர்ஷிப்பை அமைக்க முயன்று போராடினர். ஆனாலும், கே.எல்.ராகுல் 32 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்சர் படேலும் 2 ரன்னில் ரன்அவுட்டாக, கோலி நிலைத்து நின்று ஆடி அரைசதம் எட்டினார். 35 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த இந்தியா 185 ரன்களை சேர்ந்திருந்தது.
ஆனால் இதுவரை இருந்த நம்பிக்கை அடுத்த ஓவரில் கரையத் தொடங்கியது. காரணம் கோலி 54 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அடுத்த பந்தே விக்கெட்டாவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3 போட்டிகளிலும், முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்) ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 185-6 என ஸ்கோர்போர்டு அதிர்ச்சியளித்தது.
ஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் அடுத்த சிக்ஸ் நம்பிக்கையளித்தது. ஹர்திக் பாண்டியாவும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். 40 ரன்கள் சேர்த்திருந்த ஹர்திக் பாண்டியா இக்கட்டான சூழலில் அவுட்டாக குல்தீப் யாதவ் களத்திற்கு வந்தார். அவர் வந்த வேகத்தில் ஜடேஜா 18 ரன்களில் கிளம்பினார். அடுத்து வந்த முஹம்மது சமி, ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்துவிட்டு கிளம்பினார். குல்தீப் யாதவ் 6 ரன்களில் ரன்அவுட்டாக இந்திய அணி 49.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா தரப்பில், ஆடம் ஜம்பா 4 விக்கெட்டையும், ஆஷ்டன் ஆகர் 2 விக்கெட்டையும், சீன் அபாட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT