Published : 22 Mar 2023 05:49 PM
Last Updated : 22 Mar 2023 05:49 PM
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இணை ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து முதல் 10 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்தனர். இந்த இணையை 11-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார். ட்ராவிஸ் ஹெட் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மிட்செல் மார்ஷை 47 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா.
டேவிட் வார்னர் 23 ரன்களிலும், மார்னஸ் லாபுசாக்னே 28 ரன்களிலும் கிளம்ப 30 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (25), அலேக்ஸ் கேரி (38) அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் ஆடினாலும் அவர்களும் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்காததால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 269 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஹம்மத் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT