Published : 20 Mar 2023 03:31 PM
Last Updated : 20 Mar 2023 03:31 PM
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும். இந்தச் சூழலில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வேகத்தில் இந்த தொடரில் இரண்டு முறையும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில், வாசிம் ஜாபர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாம் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் விக்கெட் இழந்த விதத்தை பார்த்து அவர் மீது அனுதாபம் கொண்டிருக்கலாம். மணிக்கு 145+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடது கை பந்துவீச்சாளரான ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான். அதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது தெரிந்ததுதான். ஆனால், மீண்டும் சூர்யகுமார் அதனை எதிர்கொண்ட போது அதற்கு தயார் நிலையில் வந்திருக்க வேண்டும்.
மூன்றாவது போட்டியில் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான ஆப்ஷனாக அமையாது. அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் மூன்றாவது போட்டியில் சூர்யகுமாருக்கு நிச்சயம் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா அது குறித்து பேசி இருந்தார். “நிச்சயம் சூர்யகுமாருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும். அவர் தனது திறனை வெளிப்படுத்திய வீரர். அதனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதன் மூலம் மீண்டும் அவர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம்” என தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT