Published : 20 Mar 2023 09:14 AM
Last Updated : 20 Mar 2023 09:14 AM

‘வலது கை பவுலர்களும்தான் எங்களுக்குப் பிரச்சினை’ -  ‘உளறல் சர்மா’வான ரோஹித் சர்மா?

ரோஹித் சர்மா

தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இந்திய சூப்பர் ஸ்டார் டாப் ஆர்டரை மண்ணைக்கவ்வச் செய்தார். முதல் போட்டியில் ராகுலும் ஜடேஜாவும் காப்பாற்ற இந்திய அணி வென்றது, நேற்று விசாகப்பட்டிணத்தில் அதுவும் நடக்கவில்லை. 117 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் 121/0 என்று இந்திய அணியை அவமானகரமாகத் தோற்கடித்தது.

மிட்செல் ஸ்டார்க்கின் இன்ஸ்விங்கர்களை இந்திய ‘சூப்பர் ஸ்டார்கள்’ ஆடத்தெரியாமல் திக்கித் திணறியதையே பார்த்தோம். 9-வது முறையாக ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை அள்ளுகிறார். இடது கை பவுலர்களுக்கு எதிராக இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர்களின் ‘முன்னேற்றம்’ என்னவெனில் முன்பெல்லாம் வலது கை பேட்டர்கள், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து உடலுக்குக் குறுக்காக ஸ்விங் ஆகும் பந்துகளில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து கொண்டிருந்தனர், இப்போது இடது கை இன்ஸ்விங்கருக்கும் ஆட்டமிழக்கின்றனர். வலது காலைத் தூக்கி ஊருக்கு முன்னாலேயே முன்னால் போட்டு ஆடுவதுதான் பிரச்சினை.

ஸ்டார்க் வேகத்துக்கு பந்து உள்ளே வரும்போது ஒன்று கீழே விழுமாறு அதை ஆடுகின்றனர், அதாவது பேலன்ஸ் இல்லை. இன்னொன்று மட்டையை சரியான நேரத்துக்கு கீழே கொண்டு வரும் ரிப்ளெக்ஸ் இல்லை. பேட்டிங் பயிற்சியில் குறைகளை நிவர்த்தி செய்வதை விடுத்து பாதி நேரம் ஜிம்மில் ஏதோ ஆணழகன் போட்டிக்குச் செல்வது போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தால் பேட்டிங் எப்படி முன்னேறும் என்று கேட்கிறார் விரேந்திர சேவாக்.

நேற்று ஸ்டார்க் தன் வழக்கமான பந்துகள் மூலம் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா இருவரையும் ட்ரைவ் சபலத்துக்கு ஆளாக்கி எட்ஜ் செய்யவைத்து காலி செய்தார். சூரிய குமார் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொள்ளவில்லை, முதல் பந்து இன்ஸ்விங் ஆகும் என்பதையும் அவர் எதிர்நோக்கவில்லை, இருமுறையும் ‘நவீன சூப்பர் ஸ்டார்’, இந்தியாவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் கோல்டன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கே.எல்.ராகுலும் 9 ரன்களில் இன்ஸ்விங்கரில் காலியானார்.

விராட் கோலி ஏதாவது ஒருவடிவத்திலிருந்து ஓய்வு பெறுவது நல்லது, எத்தனை முறை எல்.பி.ஆவார். வலது கை பவுலர் வீசும் இன்ஸ்விங்கரை பந்து வரும் திசைக்கு எதிராக ஆடப்போய் கால்காப்பில் வாங்கினார். முதல் போட்டியில் ஸ்டார்க் அவரை இன்ஸ்விங்கரில் பதம் பார்த்தார். ஒரு பேட்டர் தான் எத்தனை முறை எல்.பி.ஆகியிருக்கின்றோம் என்பதைத் திரும்பிப் பார்த்தாலே போதும் தொடர்ந்து தான் ஆட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்து விடலாம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு ஒரு கேப்டன் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதிலும் ரோஹித் சர்மா தோனி, உள்ளிட்டோரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஏன் இடது கை இன்ஸ்விங்கர்களுக்கு அவுட் ஆகிறீர்கள், ஏன் இடது கை பவுலர்கள் என்றால் சரமாரியாக விக்கெட்டைக் கொடுக்கின்றீர்கள் என்ற கேள்வி ரோஹித் சர்மாவிடம் முன் வைக்கப்பட்டது. ஏனெனில் ஷாஹின் அஃப்ரீடி, ட்ரெண்ட் போல்ட், மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் டாப்லி ஆகியோர் இந்திய டாப் ஆர்டரை கடுமையாக படுத்தி எடுத்துள்ளனர்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா கூறும்போது, “2 போட்டிகளில்தான் இப்படி நடந்துள்ளது, இதற்கு முந்தைய ஒருநாள் போட்டிகளிலெல்லாம் டாப் ஆர்டர் வெளுத்து வாங்கினார்களே. அதனால் இது பற்றிக் கவலைகள் இல்லை. மேலும் எதிரணியில் ஒரு தரமான பவுலர் இருந்தால் அவர் விக்கெட் எடுக்கவே செய்வார்.

ஆம் சிறந்த பவுலர்கள் நம் சிறந்த பேட்டர்களுக்கு குறைவைப்பார்கள். எனவே இடது கை பவுலர்களாயினும் வலது கை பவுலர்களாயினும் விக்கெட்டுகள் எடுக்கவே செய்வார்கள். வலது கை பவுலர்களும்தான் எங்களுக்கு பிரச்சனை கொடுத்துள்ளார்கள், ஏன் அதை யாரும் பேசுவதில்லை?

எனவே இடது கை, வலது கை என்று பார்க்க வேண்டியதில்லை.விக்கெட்டுகளை இழப்பது கவலையளிக்கக் கூடியதுதான். எனவே எப்படி அவுட் ஆகின்றோம் என்பதை நாங்கள் உற்று கவனிக்க வேண்டும். சிறந்த உத்தி, சிறந்த முறையுடன் ஆட வேண்டும். இந்த பிட்ச் 117 ரன்களுக்கான பிட்ச் இல்லை, அதனால்தான் அவர்களை அந்த ரன்களுக்குள் சுருட்ட முடியாது. 2 விக்கெட்டுகள் சடுதியில் விழுந்தால் பார்ட்னர்ஷிப் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இடது கை பவுலர்களை ஆடுவதில் ஏன் தொடர் பிரச்சினை என்று கேட்டால் வலது கை பவுலர்களும்தான் எங்களை அவுட் செய்துள்ளனர், இது பற்றி யாரும் பேசுவதில்லை என்று பதில் அளிப்பதும், 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் பிட்ச் இல்லை அதனால் அவர்களைச் சுருட்ட முடியவில்லை என்றும் கூறுவதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை. உளறல் சர்மாவாகி விட்டாரா என்ன ரோஹித் சர்மா? அல்லது அவருக்கு உடல்நலம் சரியில்லை போல் தெரிகின்றது, செய்தியாளர்கள் சந்திப்பின் போது இருமிக்கொண்டேதான் பேட்டி அளித்தார்.

சென்னையில் 3வது ஒருநாள் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் பேட்டியிலேயே ரோஹித் சர்மா சுட்டிக்காட்டி விட்டார். தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x