Published : 20 Mar 2023 07:46 AM
Last Updated : 20 Mar 2023 07:46 AM
வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இலங்கை அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200 ரன்கள் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் பெற்றது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கருணாரத்னே 89 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.
பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி ஆட்டநேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. ஓஷாடா பெர்னாண்டோ 5, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
குசல் மெண்டிஸ் 50 ரன்களும்,ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி விளையாடவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT