Last Updated : 14 Sep, 2017 07:41 AM

 

Published : 14 Sep 2017 07:41 AM
Last Updated : 14 Sep 2017 07:41 AM

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம்: முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடி உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இந்த ஆட்டத்துக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிரெவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அரை சதம் விளாசினார்.

இந்திய அணி இலங்கை சுற்றுப் பயணத்தில் 3 வடிவிலான தொடர்களையும் முழுமையாக 9-0 என கைப்பற்றிய அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கலந்து கொள்கிறது. அதேவேளையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரை 1-2 என இழந்திருந்தது.

இதனால் அந்த அணி தற்போது நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் செயல்படும் என கருதப்படுகிறது. மேலும் அந்த அணி வீரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பாக்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸம்பா உள்ளிட்டோருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதைக் கொண்டு அந்த அணி சாதிக்க முயற்சிக்கும்.

மாறாக தோல்வியை சந்திக்குமானால் ஆடுகளங்களை குறைகூறுவதோ அல்லது இங்குள்ள சூழ்நிலையை தகவமைத்து கொள்வது தொடர்பான பிரச்சினையை முன்வைத்தோ இம்முறை அந்த அணி தோல்விக்கு காரணம் கற்பிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் சமீபகாலமாக உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் சற்று குறையத் தொடங்கி உள்ளதால் அந்த அணி மீண்டும் உயர்ந்த நிலையை அடைய, இந்தியத் தொடரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடர் குறித்து தனியார் சானல் ஒன்று விவாத நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தியது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:

பெரும்பாலான ஆஸ்திரேலிய வீர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார்கள். அவர்களுக்கு இந்தியா 2-வது சொந்த நாடு போன்றது. ஏனெனில் இங்கு ஐபிஎல் தொடர்களில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்கள். மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடாதது எங்களுக்கு துரதிருஷ்டம்தான்.

ஆனால் இந்த ஆஸ்திரேலி அணி எந்தவித காரணமும் கற்பிக்க முடியாது. இங்குள்ள சூழ்நிலையை வீரர்கள் நன்கு அறிந்துள்ளனர். பெரிய அளவிலான இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என கைப்பற்றும் என்பது எனது கணிப்பு. தங்கள் அணி உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் விரும்புகிறார்கள். ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பெற முடியும்.

இந்திய அணிக்கு ஆக்ரோஷ குணம் கிடைத்துள்ளது. அணியானது ஆக்ரோஷமான கேப்டனால் வழிநடத்தப்படுகிறது. விராட் கோலியிடம் தோல்வி பயம் தெரியவில்லை. இது மிகப்பெரிய சாதகமான விஷயம். அவர், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்மித் அவரை விட ஒருபடி மேலே இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் இருவருமே சமமானவர்கள். ஒருவர் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பதல்ல விஷயம், அது அணியின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் விரர் லட்சுமண் கூறும்போது, “ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 4-1 என வெல்லும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x