Published : 28 Sep 2017 08:25 AM
Last Updated : 28 Sep 2017 08:25 AM

எவின் லூயிஸ் திகைக்க வைக்கும் அதிரடி; ஜோசப் அருமை: மே.இ.தீவுகளின் துரதிர்ஷ்ட தோல்வி

கெனிங்டன் ஓவலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் விளாசியும் மழை காரணமாக டக் வொர்த் முறையில் இங்கிலாந்திடம் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி கண்டது.

எவின் லூயிஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததோடு, 189 ரன்கள் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்கோரை கடக்கும் வாய்ப்பையும் தவற விட்டார். காயம் அவரை வெளியேற்றியது. இங்கிலாந்து 3-0 என்று முன்னிலை.

357 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட வேண்டிய இங்கிலாந்து அல்சாரி ஜோசப்பின் அசாத்தியமான வேகப்பந்து வீச்சில் இடையில் 5 விக்கெட்டுகளை இழந்து 27.1 ஓவர்களில் 181/5 என்று பரிதவித்தது. ஆனால் அதன் பிறகு 8 ஓவர்களில் மொயின் அலி (48 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (43நாட் அவுட்) ஆகியோரது 77 ரன்கள் அதிரடி ரன் கூட்டணியில் 35.1 ஓவர்களில் 258/5 என்று டக்வொர்த் ஸ்கோரைக் கடந்தது. ஒருவேளை மே.இ.தீவுகள் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் இலக்கு டக்வொர்த் முறையில் 272 ரன்களாக அமைந்திருக்கும், இங்கிலாந்து தோல்வி தழுவியிருக்கும்.

வெற்றி தோல்வி சகஜமே. ஆனால் எவின் லூயிஸ் நேற்று ஆடிய அதிரடி ஆட்டம் திகைக்க வைக்கும் இன்னிங்ஸ் ஆகும். 130 பந்துகளில் 17 பவுண்டரிக்ள் 7 சிக்சர்களுடன் 176 ரன்கள் எடுத்து அவர் ஜேக் பால் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய யார்க்கரில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு கணுக்காலைத் தாக்க காயத்தினால் துடித்துப் போய் விட்டார், மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில்தான் அவர் செல்ல வேண்டியிருந்தது. அதே போல் ஹோல்டரின் இன்னிங்ஸ் ஒரு கபில் ரக காட்டடியாகும். 62 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்தார் ஹோல்டர், இவரும் எவின் லூயிஸும் இணைந்து 18 ஓவர்களில் 168 ரன்களை விளாசித்தள்ளினர். கடைசியில் போவெல் 15 பந்துகளில் 28 ரன்களை எடுக்க கடைசி 10 ஓவர்களில் மே.இ.தீவுகள் 131 ரன்கள் விளாசித்தள்ளி, கடைசியில் மழையால் தோல்வு தழுவியது உண்மையில் துரதிர்ஷ்டமே. தொடரில் இங்கிலாந்து 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் வோக்ஸ் ஆரம்பத்தில் கிடைத்த ஸ்விங் பந்து வீச்சில் கிறிஸ் கெய்ல் (2), ஷேய் ஹோப் (11), மர்லன் சாமுவேல்ஸ் (1) ஆகியோரைக் காலி செய்ய மே.இ.தீவுகள் 6.1 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த் இன்னொரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் ஜேசன் மொகமத் (46), எவின் லூயிசுடன் இணைந்து இருவரும் 4-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர். 28.2 ஓவர்

40-வது ஓவரிலிருந்து திடீர் ஆவேசம் கொண்ட எவின் லூயிஸ்; சிக்சர் மழை

39-வது ஓவர் வரைக்கும் மே.இ.தீவுகள் இன்னிங்ஸில் சிக்சரே வரவில்லை. ஆனால் அடுத்த 6 ஓவர்களில் 11 சிக்சர்கள் விளாசப்பட்டது உண்மையில் இங்கிலாந்தை திகைக்க வைத்தது. கிறிஸ் கெய்ல் மீண்டும் இறங்கி விட்டாரோ அல்லது விவ் ரிச்சர்ட்ஸ் இடது கையில் பேட் செய்கிறாரோ என்று யோசிக்கும் அளவுக்கு காட்டடியில் இறங்கினார் எவின் லூயிஸ்.

40-வது ஓவரில் லியாம் பிளங்கெட் வீச வரும்போது மே.இ.தீவுகள் 212/4 என்று இருந்தது. எவின் லூயிஸ் 105 பந்துகளில் 109 ரன்களை எடுத்திருந்தார், இதுவரை தன்னை மீறி எந்த ஒரு ஷாட்டையும் அவர் ஆடிவிடவில்லை. 14 பவுண்டரிகளை அடித்திருந்தார் எவின் லூயிஸ். பிளங்கெட் பந்தை ஸ்கொயர் லெக்கில் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து தொடங்கினார் லூயிஸ். அடுத்த பந்தில் முன்னங்காலை லேசாக ஒதுக்கிக் கொண்டு நேராக ஒரு சிக்ஸ். அடுத்த அடில் ரஷீத் ஓவரில் கூக்ளியில் லூயிஸ் அடித்த ஷாட்டில் ஜேசன் ராய் கவர்ஸில் கடினமான வாய்ப்பை நழுவ விட்டார். கேட்சை விட்டால் என்ன ஆகும் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார் லூயிஸ். சிக்ஸ் மிட்விக்கெட்டிலும் பவுண்டரி அருமையான பைன் லெக் பிளிக் மூலமும் வந்தது.

ஹோல்டர் தன் பங்குக்கு மொயின் அலியை நேராக இரண்டு இடி போன்ற ஷாட்டில் சிக்சர்களை விளாசினார். அதன் பிறகு எங்கு போட்டாலும் அடிதான். 62 பந்துகளில் ஹோல்டர் 4 பவுண்டரிக்ள் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை விளாசினார். எவின் லூயிஸ் முதலில் 94 பந்துகளில் சதம் கண்டவர் 130 பந்துகளில் 17 பவுண்டரி 7 சிக்ச்ர்களுடன் 176 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் பால் வீசிய ரவுண்ட் த விக்கெட் யார்க்கரில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு கணுக்காலைத் தாக்க துடிதுடித்து விழுந்து விட்டார், ஸ்ட்ரெட்சரில்தான் பெவிலியன் எடுத்துச் செல்லப்பட்டார், கடைசியாக கிடைத்த தகவலின்படி நூலிழை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எவின் லூயிஸுக்கு. 47-வது ஓவரில் அவர் 176 ரன்களில் வெளியேறினார், ஒருவேளை இருந்திருந்தால் இரட்டைச் சதம் விளாசியிருக்கக் கூடும் ஏனெனில் அந்த மூடில்தான் இருந்தார் அவர். இது மே.இ.தீவுகள் அணியின் 4-வது சிறந்த ஒருநாள் ஸ்கோராகும்.

மேலும் இங்கிலாந்தில் எந்த ஒரு வீரரும் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததில்லை. போவெல், ஹொல்டருடன் இணைய அவர் 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கடைசி 11 ஓவர்களில் 13 சிக்சர்களுடன் 144 ரன்கள் விளாசிய மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது.

அல்சாரி ஜோசப்பின் அபாரப் பந்து வீச்சு: இங்கிலாந்து டக்வொர்த் முறையில் வெற்றி!

அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட ஜேசன் ராய் தொடக்க வீரராக களமிறங்கினார். ஜேரோம் டெய்லர், ஹோல்டர் ஷார்ட் பிட்ச் ஆக வீச 104 ரன்களில் ஜேசன் ராய் மட்டும் வெளுத்துக் கட்டி 70 ரன்களை எடுத்தார். மிகுவெல் கமின்ஸை நேராக ஒரு அரக்க சிக்ஸ் அடித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை மூன்றிலக்கத்துக்குக் கொண்டு சென்றார்.

66 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 84 ரன்கள் எடுத்த ஜேசன் ராய், அல்சாரி ஜோசப்பின் ஸ்லோ ஆஃப் கட்டரை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களில் விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஜோசப்பிடம் வெளியேறினார். ஜோ ரூட்டுடன் 14 ரன்களில் ஜோசப் வீசிய பந்தை புல் ஷாட் ஆட பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. ஜோஸப் 90 மைல்கள் வேகத்தில் வீசி பிறகு நல்ல வேகம் குறைந்த ஸ்லோ ஆப் கட்டர்களையும் திறம்பட வீசினார்.

இங்கிலாந்து அணி இப்போது 157/3 என்ற நிலையில் டக்வொர்த் முறையில் 18 ரன்கல் பின்னால் இருந்தது. மோர்கன் கடைசி 8 இன்னிங்ஸ்களில் 12 ரன்களையே எடுத்திருந்தார், இந்தப் போட்டியில் பார்மை மீட்டெடுக்கலாம் என்று நினைத்த தருணத்தில் 19 ரன்கள் எடுத்த அவர் ஜோசப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட அது சிக்சருக்குப் பறந்து கொண்டிருந்தது, ஆனால் இடையில் கைல் ஹோப் ஒரு எம்பு எம்பி அசாத்திய கேட்சைப் பிடித்தார். சாம் பிலிங்ஸ், ஜோசப் பந்தில் கெய்லிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற 181/5 என்று ஆனது.

அன்று பிரிஸ்டலில் 53 பந்துகளில் சதம் எடுத்த மொயீன் அலியும், ஜோஸ் பட்லரும் இணைந்தனர். மே.இ.தீவுகள் ஸ்பின்னர் ஆஷ்லி நர்ஸ், மொயீன் அலிக்கு 3 பந்துகளில் 16 ரன்களை விட்டுக் கொடுக்க நம்பிக்கை பிறந்தது. 33-வது ஓவர் முடியும் போது கூட இங்கிலாந்த் அணி டக்வொர்த் முறையில் 15 ரன்கள் பின்னிலையில் இருந்தது. ஆனால் 2 ஓவர்களில் மே.இ.தீவுகளின் விதி முடிந்தது, டெய்லரின் ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி பறக்க டக்வொர்த் தேவையை மே.இ.தீவுகள் கடந்தது. மொயின் அலி 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்களையு பட்லர் 35 பந்துகளில் 43 ரன்களையும் எடுக்க இருவரும் 8 ஓவர்களில் 77 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அதிர்ஷ்டகரமான வெற்றியை ஈட்டியது. ஆட்ட நாயகனாக அசாத்திய அதிரடி காட்டிய எவின் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x