Published : 16 Mar 2023 12:50 PM
Last Updated : 16 Mar 2023 12:50 PM
கிரிக்கெட் ஆட்டத்தில் ஸ்லெட்ஜிங் என்பது ஆஸ்திரேலியர்களால் புனிதமாக்கம் செய்யப்பட்டு உன்னத நடத்தையாக உயர்விக்கப்பட்டது. ஆனால் மே.இ.தீவுகளில் ஒரு நட்பு ரீதியான கலாய்த்தலாக, தனிநபர் தாக்குதலாக, காயப்படுத்தலாக இருந்துள்ளதாக சுனில் கவாஸ்கர் ஒருமுறை கூறியுள்ளார்.
ஆனால், பாகிஸ்தானியர்களுக்கு மே.இ.தீவுகள் வீரர்கள் போன்ற ஒரு நயமான நடத்தை கிடையாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அத்தகைய ஒரு சம்பவத்தைத்தான் இப்போது பாகிஸ்தானின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் இப்போது கூறி தான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று வருந்தும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் உச்சகட்ட பார்மில் இருந்த சமயம். அதுவும் கனடா டொராண்டோ மைதானத்தில் வக்கார், வாசிம் அக்ரம், ஆகிப் ஜாவேத் போன்றோரை பிரித்து மேய்ந்த காலக்கட்டம். அப்போதுதான் நுழைகின்றார் சக்லைன் முஷ்டாக். அப்போது ஓர் இளம் வீரராக சச்சின் டெண்டுல்கரை தான் அசிங்கமாக ஸ்லெஜ்ட் செய்ததை இப்போது குறிப்பிட்டு வருந்தியுள்ளார்:
“ஒரு முறை சச்சினுடன் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கனடாவில் மேட்ச். நான் அப்போதுதான் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் ஆடிவிட்டு வருகின்றேன். நான் ஒரு சின்னப்பையன் அப்போது, என் பவுலிங் என்ற ஒரே உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். கவுண்ட்டி ஆடிவிட்டு வந்ததால் கொஞ்சம் அந்த வயதுக்கேயுரிய அசட்டுத் துடுக்குத்தனம் என்னிடம் இருந்தது.
சச்சின் டெண்டுல்கர் ஒரு புத்திசாலியான கிரிக்கெட் வீரர். நான் அவருக்கு ஒரு டைட்டான முதல் ஓவரை வீசி விட்டேன் என்று அவரை ஸ்லெட்ஜ் செய்தேன். நான் சில வன்சொற்களை அவர் மீது பிரயோகித்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர், நான் ஸ்லெட்ஜ் செய்த பிறகே என்னிடம் வந்து, ‘சக்கி, நீங்கள் இப்படிப்பட்டவர் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடியவர் என்று நான் உங்களைக் கருதவில்லை. நீங்கள் நாகரிகமான மனிதர், நயமான உள்ளம் படைத்தவர் என்றே நினைத்தேன்’ என்றார்.
இந்த வார்த்தைகள் என்னை உலுக்கி விட்டன. அடுத்த 4 ஓவர்களுக்கு அவர் அதைக் கூறியவிதமே என் மனத்தை ஆக்கிரமித்திருந்தது. அவர் வார்த்தை என்னை அறைந்து விட்டன. அவர் கூறியது என்னை விழுங்கி விட்டது. ஆனால் அவர் சொன்னதன் உண்மையான அர்த்தம் எனக்குப் பிடிபடுவதற்குள் அவர் தன் வேலையை திறம்பட முடித்து விட்டார். ஆம்! அவர் செட்டில் ஆகிவிட்டார்.
இது ஒரு உத்திதான். யாராவது நம்மிடையே நல்ல முறையில் பேசினால் நாம் அதையே யோசித்துக் கொண்டிருப்போம். நான் சச்சின் சொல்வதையே யோசித்துக் கொண்டிருக்க அவரோ அடுத்த 4-5 ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்துக் கொண்டிருந்தார். நான் அவர் மீது மதிப்பை வளர்த்துக் கொண்டேன். அப்போது மேலேறி வந்து என் பந்தை அடித்தாரே பார்க்கலாம் அது முகத்தில் அடித்தது போல்தான். அப்போதுதான் புரிந்தது அவர் என் மனதில் விளையாடி விட்டார்.
அவர் செட்டில் ஆன பிறகுதான் புரிந்தது ஆட்டம் எங்கள் கையைவிட்டு போய்விட்டதென்று. பிற்பாடு மாலையில் விடுதியில் சச்சினை சந்தித்தபோது நான் சொன்னேன், ‘நீங்கள் மிகவும் புத்திசாலி’ என்றேன் அவர் சிரிக்கத் தொடங்கினார். என்னை எப்படி அவர் பொறி வைத்துப் பிடித்தார் பாருங்கள்! பேட்டினால் அல்ல நல்ல வார்த்தைகளைக் கூறியே என்னைப் பொறியில் சிக்க வைத்தார் பாருங்கள் சச்சின்” என்றார் சக்லைன் முஷ்டாக்.
சச்சின் டெண்டுல்கரின் இயல்பான குணமே அவர் அப்படி எதிர்வினையாற்றுவதுதான்! மென்மையான போக்குக் கொண்டவர்தான் சச்சின். அவர் சக்லைனுக்கு நல்ல முறையில் அறிவுரை செய்ததைக் கூட ஏதோ தந்திரமான செயல் என்று இப்போதும் பார்க்கின்றார் சக்லைன் முஷ்டாக். கிரிக்கெட்டைத் தாண்டி சக்லைன் முஷ்டாக் மற்றவரிடம் கொள்ளும் உறவு முறைகள் எப்படி இருக்கும் என்பதை இதிலிருந்து யூகிக்க முடிகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT