Published : 16 Mar 2023 06:28 AM
Last Updated : 16 Mar 2023 06:28 AM
இதுவரை இந்தியாவில் எந்த சர்வதேச ஆடவர் குத்துச்சண்டை போட்டிகளும் நடந்தது இல்லை. ஆனால் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஏற்கெனவே 2006 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் டெல்லியில் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டிலேயே உலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வந்தது. ஆனால் ஒப்பந்தத் தொகையை குறித்த காலத்துக்குள் சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு வழங்காததால் போட்டியை நடத்தும் வாய்ப்பு செர்பியாவுக்கு சென்று விட்டது.
சென்ற ஆண்டு துருக்கியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த நிகத் ஜரீன், ஃப்ளைவெயிட் பிரிவில் வென்ற தங்கப்பதக்கமும் அடங்கும். தற்போது நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 65 நாடுகளிலிருந்து 300-க்கும் அதிகமான குத்துச்சண்டை வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
ரஷ்யாவைச் சேர்ந்த உமர் கிரெம்லேவ் தலைமையிலான சர்வதேச குத்துச்சண்டை சங்கமானது ரஷ்யா மற்றும் பெலாரஸ் குத்துச்சண்டை வீராங்கனைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பரிந்துரைக்கு எதிராக தங்கள் சொந்தக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதித்ததை அடுத்து உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, போலந்து, சுவீடன், நெதர்லாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
பொதுவாக ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய ஆண்டில் நடைபெறும் இது போன்ற போட்டிகள் தகுதிச் சுற்றாக கருதப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார்கள். ஆனால் கடந்த 2019-ம்ஆண்டு முதல் சர்வதேச குத்துச்சண்டைசங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியே நடத்தும் என ஒருபுறம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகளை நடத்துவதாக அறிவித்தது. இந்த ஆண்டுஆடவர் மற்றும் மகளிர் உலக சாம்பியன்ஷிப் முக்கிய தகுதிப்போட்டிகளாக இருக்கும் என தெரிவித்தது. தற்போது நடைபெறும் மகளிர் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் தங்கள் ஆலோசனையின்றி ஒலிம்பிக் போட்டிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார் உமர் க்ரெம்லெவ்.
இது நடைபெறுகிறதோ இல்லையோ, தற்போதைய சாம்பியன்ஷிப்பில் உள்ள 12 பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் வெற்றியாளராக வர இருப்பவர் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையை பெறுவார். இந்தியா சார்பாக நீத்து கங்காஸ், நிகத் ஜரீன், சாக் ஷி சவுத்ரி, ப்ரீத்தி, மனிஷா மவுன், ஜாஸ்மின் லம்போரியா, சாஷி சோப்ரா, மஞ்சு பாம்போரியா, சனம்சா சானு, லோவ்லினா போர்கோஹெய்ன் (டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றவர்), ஸாவிட்டிபூரா, நூபுர் ஷியோரன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இம்முறை மேரி கோம் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை. சென்றஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளின் சோதனைப் போட்டிகளின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்எந்தப் போட்டியிலும் பங்கு பெறவில்லை. ஆறு முறை உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற அவர்அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலோ, ஒலிம்பிக்கிலோ பங்குபெற முடியாது. காரணம் அவருக்குஅப்போது வயது 41 ஆகி இருக்கும் (போட்டிகளில் பங்கேற்க அதிகபட்ச வயது 40 தான்).
இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கு பெற முடியாது போன மஞ்சு ராணி,சிக்ஷா நர்வால், பூனம் பூனியா ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். பல்வேறு பிரிவுகளில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் பெற்ற அனைவரிலும் தங்கள் மூன்று பேரை மட்டுமே இம்முறை பங்கெடுக்க விடவில்லை என்பதுதான் அவர்கள் தரப்பு வாதமாக இருந்தது. ஆனால் தேர்வு விதிகள் மாறிவிட்டதால் அவர்கள் தரப்பு வாதம் ஜெயிக்கவில்லை.
போட்டியின் அடிப்படை விதிகள்..
> ஒவ்வொரு சுற்றுக்கும் இரண்டு நிமிடங்கள் என்று 10 சுற்றுகள். சுற்றுகளுக்கு நடுவே ஒரு நிமிட இடைவெளி.
> பங்கேற்கும் வீராங்கனைகள் முகத்தில் எந்தவித ஒப்பனைப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
> தங்கள் தலைமுடியை பறக்கவிட்டுக் கொள்ளாமல் மிருதுவான பொருள்களால் கட்டிக் கொள்ள வேண்டும்.
> மார்பகப் பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். வாய்க் கவசமும் தேவை.
> போட்டிக்கு முன்னதாக வீராங்கனைகள் தான், கருவுற்றிருக்கவில்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT