Published : 15 Mar 2023 06:47 AM
Last Updated : 15 Mar 2023 06:47 AM
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 17-ம்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. குடும்ப காரணங்களுக்காக இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா கலந்துகொள்ளவில்லை. இதனால் ஹர்திக்பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
29 வயதான ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டுஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே பட்டம் வென்று கொடுத்தார். சமீபகாலமாக டி 20-ல் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் 50 ஓவர் போட்டியில் அவரது கேப்டன் செயல்பாடு எப்படி? இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: டி 20 கிரிக்கெட் மட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும்இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட போதுஅவரது கேப்டன்ஷிப் என்னை மிகவும் கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றி பெற செய்யும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பைதொடருக்கு பின்னர் அவரால் இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.
நடுவரிசை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவராகவும் ஹர்திக் பாண்டியா இருப்பார். ஐபிஎல் தொடரில் சரியான நேரத்தை அறிந்து குஜராத் அணிக்காக பேட்டிங் வரிசையில் தன்னை தானே உயர்த்திக் கொண்டார். அணிக்கு சில உந்துதலும், உத்வேகமும் தேவைப்படும்போது அதை அவர், செய்வார்.
கேப்டனாக ஹர்திக் பாண்டியா, அணியில் உள்ள வீரர்களுக்குஆறுதல் உணர்வை தருகிறார். அவர், வீரர்களை சிறப்பாக கையாள்கிறார். ஒரு வீரருக்கு ஆறுதல் உணர்வைக் கொடுக்கும் போது, அது அவரை தனது இயல்பான ஆட்டத்தை விளையாடுவதற்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT