Published : 14 Mar 2023 08:29 AM
Last Updated : 14 Mar 2023 08:29 AM
கிறைஸ்ட்சர்ச்: இலங்கை அணிக்கு எதிராக மழையால் பாதிக்கப்பட்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. 4-வது நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் லேதம் 11, கேன் வில்லியம்சன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெற்றிக்கு மேற்கொண்டு 257 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து விளையாடியது.
மழை காரணமாக 2 அமர்வுகள் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடைசி அமர்வில் 53 ஓவர்கள் வீசப்படும் என நடுவர்கள் அறிவித்தனர். ஓவருக்கு சராசரியாக 4.85 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. டாம் லேதம் 24, ஹென்றி நிக்கோல்ஸ் 20 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் ஆட்டமிழந்தனர். 90 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டேரில் மிட்செல், வில்லியம்சனுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
86 பந்துகளில், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் விளாசிய நிலையில் பெர்னாண்டோ பந்தில் போல்டானார் டேரில் மிட்செல். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள் சேர்த்தது. இதன்பின்னர் களமிறங்கிய டாம் பிளண்டல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 10 ரன்களில் நடையை கட்டினர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தது. லகிரு குமரா வீசிய 69-வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் டிம் சவுதி (1) அவுட் ஆனார். பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் இரு பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில் இரு ரன்கள் ஓடும் முயற்சியில் மேட் ஹென்றி (4) ரன் அவுட் ஆனார். 4-வது பந்தை வில்லியம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் அவரால் ரன் சேர்க்க முடியாமல் போனது.
கடைசி பந்தை பெர்னாண்டோ பவுன்சராக வீச, அது வில்லியம்சனின் மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நோக்கி பாய்ந்தது. நொடிப்பொழுதில் வில்லியம்சன் ரன் எடுக்க ஓடினார். விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெலா பந்தை நான்-ஸ்டிரைக்கர் பகுதியை நோக்கி வீச அதனை பெர்னாண்டோ பெற்று தனது துல்லியமான த்ரோவால் ஸ்டெம்பை தகர்த்தார். ஆனால் வில்லியம்சன் சாமர்த்தியமாக மட்டையை முன்னோக்கி செலுத்தி உரசியபடி கிரீஸுக்குள் பாய்ந்தார். இது வெற்றி ரன்னாக அமைந்தது.
முடிவில் நியூஸிலாந்து அணி 70 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 27-வது சதத்தை விளாசிய கேன் வில்லியம்சன் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி பெரிய அளவிலான இலக்கை துரத்தி வெற்றி காண்பது இதுவே முதன்முறை. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை அணியானது இந்தியாவிடம் பறிகொடுத்தது.
இலங்கை அணி பீல்டிங்கில் அதிக தவறுகளை மேற்கொண்டது தோல்விக்கு வழிவகுத்தது. முக்கியமாக வில்லியம்சன் 33 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை நிரோஷன் திக்வெலா தவறவிட்டார். இதற்கான பலனை இலங்கை அணி அனுபவித்தது.
இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை வெலிங்டனில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT