Published : 13 Mar 2023 04:26 PM
Last Updated : 13 Mar 2023 04:26 PM
கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று கேன் வில்லியம்சன் (121 நாட் அவுட்) அதியற்புத சதத்தை அடிக்க, நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது.
அதுவும் கடைசி நேர நாடகம் மிகப்பெரிய த்ரில். மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் சில மணி நேரங்கள் கழித்தே இன்று தொடங்கியது. அதனால் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது, கடைசி ஓவரை அஷிதா பெர்னாண்டோ வீச அது பவுன்சர் பந்து, கேன் வில்லியம்சன் புல் ஆட முயன்று தோல்வி அடைந்தார், ஆனால் அதற்குள் ஒரு பை ரன் ஓடி விட முயல விக்கெட் கீப்பர் ரன்னர் முனைக்கு த்ரோ அடிக்க அது நேராக ஸ்டம்பைத் தாக்க, திக் திக் கணத்தின் முடிவில் கேன் வில்லியம்சன் டைவ் அடித்து ரீச் ஆகியிருந்தார். நியூஸிலாந்து கடைசி பந்தில் வெற்றி பெற்று இலங்கையின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக் கனவைத் தகர்த்தது. வில்லியம்சன் முழந்தாளிட நீல் வாக்னர் அவரைத் தழுவிக் கொண்டார்.
கேன் வில்லியம்சனின் அதியற்புதமான சதமாகும் இது. 285 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட 8 விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. கேன் வில்லியம்சன் 194 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 121 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.
இதற்கு முன் 1994-ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச், லான்காஸ்டர் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் கடைசி இன்னிங்சில் 324/5 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே நியூசிலாந்தின் அதிகபட்ச வெற்றிகரமான நான்காவது இன்னிங்ஸ் ரன் சேஸிங் ஆகும்.
இலங்கை அணிக்காக அசிதா பெர்னாண்டோ (3-63) சிறப்பாக பந்து வீசினார், ஆனால் கடைசி பவுன்சர் பந்தில் வில்லியம்சன் மற்றும் நீல் வாக்னர் வெற்றிக்காக ஓடிய பை ரன் மிகவும் நெருக்கமானது. வில்லியம்சன் முழு நீளமாக டைவிங் செய்து வெற்றியை உறுதி செய்தார்.
முதுகில் ஏற்பட்ட காயம் மற்றும் வலது தொடை எலும்பு முறிவு காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடாத வாக்னர், நியூசிலாந்துக்கு 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார். பெர்னாண்டோவின் கடைசி இரண்டு பந்துகளும் ஷார்ட் பிட்ச் பந்துகளாக இருந்த நிலையில், கடைசி பந்து டாட் பந்து ஆனால் முன்னதாக வில்லியம்சன் ஒரு பவுண்டரியை அடித்திருந்தார்.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 28/1 என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது, வெற்றிக்கு இன்னும் 257 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழையால் 4 மணி நேர ஆட்டம் பறிபோனது. 52 ஓவர்கள் வீசலாம் என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்தனர்.
ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, டாம் லேதம் (25) லெக் ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூர்யாவால் வீழ்த்தப்பட்டார், ஹென்றி நிக்கோல்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்துவுடன் முதல் இன்னிங்சில் சதம் அடித்த டேரில் மிட்செல் இறங்கினார். நான்காவது விக்கெட்டுக்கு வில்லியம்சனுடன் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிட்செல் 81 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வெற்றியின் விளிம்பில் கொண்டு சென்றார்.
ஆனால் அப்போதுதான் பெர்னாண்டோ தன் யார்க்கர்கள் மூலம் மிட்செல் மற்றும் டாம் பிளண்டெல் (3) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து இலங்கைக்கு புதிய நம்பிக்கை அளித்தார். மைக்கெல் பிரேஸ்வெல் (10) டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் டிம் சவுத்தி அவுட் ஆனதாலும், மாட் ஹென்றி ரன் அவுட் ஆனதாலும் ஆட்டம் உச்சகட்ட டென்ஷனாக அமைந்தது.
இருப்பினும் வில்லியம்சனின் அற்புதமான ஆட்டம், அவரது உறுதியினால் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வெற்றியை மறுத்ததையடுத்து ஒருவேளை இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தால் இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும். இப்போது முடிந்து விட்டது.
இலங்கை - நியூஸிலாந்து 2வது டெஸ்ட் போட்டி பேசின் ரிசர்வில் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது. ஆட்ட நாயகனாக டேரில் மிட்செல் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT