Published : 13 Mar 2023 04:10 PM
Last Updated : 13 Mar 2023 04:10 PM

அகமதாபாத் டெஸ்ட் டிரா; தொடரை வென்றது இந்தியா - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி!

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா பார்டர் - கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்றதோடு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கின்றது.

கடைசியில் லபுஷேன் 63 ரன்கள் எடுத்தும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக, கவாஜா காயமடைந்ததால் தொடக்கத்தில் இறங்கிய மேத்யூ குனிமேன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்.பி.ஆனார். ஆனால், இவர் ரிவியூ செய்திருந்தால் அது நாட் அவுட் ஆகியிருக்கும். ஏனெனில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தாகும். இந்திய நடுவர் கையை விர்ரென்று உயர்த்தினார். குனிமேன் ரிவியூ செய்யவில்லை.

இன்னொரு தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அற்புதமான ஒரு 90 ரன்களை எடுத்து அக்சர் படேலின் பது ஒன்று ரஃபில் பட்டு திரும்ப பவுல்டு ஆகி வெளியேறினார். செடேஸ்வர் புஜாரா, ஷுப்மன் கில் ஆகியோரும் பந்து வீசினர்.

ஆஸ்திரேலியா டெல்லி டெஸ்ட் போட்டியில் 28 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததை நினைத்து இப்போது வருந்துவார்கள். ஏனெனில் அன்று அப்படி சரியவில்லை எனில் தொடரையே வென்றிருக்கலாம். ஆனால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் குழிப் பிட்சில் இந்திய ஸ்பின்னர்கள் அபாயகரமாக வீசினார்கள், ஆஸ்திரேலியாவினால் ஆட முடியவில்லை, காரணம் அவர்கள் தங்கள் தடுப்பு உத்தி மீது அதிக நம்பிக்கை வைக்கவில்லை.

மாறாக, இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டன்சி மாற ஸ்டீவ் ஸ்மித் கொஞ்சம் ஆக்ரோஷமான களவியூகம் அமைத்து இந்தியாவை தோற்கடிக்கச் செய்தார், நேதன் லயனை அந்த டெஸ்ட்டில் இந்திய வீரர்களால் ஆட முடியவில்லை. அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிட்ச் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்ப, இந்த டெஸ்ட்டிற்கு முழுக்க முழுக்க ஒரு பிளாட் பிட்சைப் போட்டனர். அதனால், ஆஸ்திரேலியா 480 ரன்களை எடுக்க, இந்திய அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி சதங்களுடனும் அக்சர் படேலின் அற்புதமான அரைசதத்தினாலும் இந்தியா 571 ரன்களைக் குவித்தது.

ஆனால், கடைசி வரை பிட்ச் உடையவில்லை. பவுலர்கள் கால் பதித்த ரஃப் பகுதிகளில் பிட்ச் ஆகும் பந்துகள்ள் திரும்பின. ஆனால், மெதுவாகத்தான் திரும்பின. இதனால் ஆஸ்திரேலியாவிடம் இன்று நாம் எதிர்பார்த்த சரிவு நிகழவில்லை.

நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் அற்புத சதத்தினால் நியூஸிலாந்து வெற்றி பெற இலங்கை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க, இந்தியா தகுதி பெற்றது. ஜூன் மாதம் லண்டன் ஓவலில் இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x