Published : 11 Mar 2023 07:29 PM
Last Updated : 11 Mar 2023 07:29 PM
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நான்காம் நாள் ஆட்ட திட்டம் என்ன என்பதை பகிர்ந்துள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் தற்போது 191 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்த இன்னிங்ஸில் இந்திய அணிக்காக சுப்மன் கில் சதம் விளாசினார். கோலி, அரைசதம் பதிவு செய்துள்ளார். புஜாரா 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு கில் தெரிவித்தது:
“இந்த மைதானத்தில் சதம் பதிவு செய்ததில் மகிழ்ச்சி. இந்த மைதானம் ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் விளையாடும் அணியின் ஹோம் கிரவுண்டாக உள்ளது. இந்த ஆடுகளம் பேட் செய்ய சிறப்பாக உதவுகிறது. சிங்கிள் எடுக்க சாத்தியம் இருக்கும் இடத்தில் எல்லாம் நான் ஓட்டம் எடுத்தேன்.
நான் பாசிட்டிவாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் பெரிதாக அட்டாக் செய்யவில்லை. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை நாங்கள் நெருங்கியுள்ளோம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஸ்கோர் போர்டில் அதிகபட்ச ரன்களை குவிக்க விரும்புகிறோம். ஐந்தாம் நாளன்று ஆடுகளம் எங்கள் அணி பவுலர்களுக்கு உதவினாலும் உதவலாம்” என கில் தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் கில் பதிவு செய்துள்ள முதல் டெஸ்ட் சதம் இது. நடப்பு ஆண்டில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், இரண்டு சதம், டி20 கிரிக்கெட்டில் சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்துள்ளார் கில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT