Published : 11 Mar 2023 03:28 PM
Last Updated : 11 Mar 2023 03:28 PM
அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று சுப்மன் கில் ஒரு பந்தை கால்காப்பில் வாங்க பிளம்ப் போல் தெரிந்தது. ஆனால், கள நடுவர் கெட்டில்ப்ரோ ‘நாட் அவுட்’ என்றார். ஆஸ்திரேலியா ரிவியூ கேட்டது. அதன் பிறகே அனைத்துக் குழப்பங்களும் ஏற்பட்டன.
ரிவியூ ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக இல்லை என்பதோடு ஒரு ரிவியூவையும் அவர்கள் இழந்தனர். சம்பவம் 18-வது ஓவரில் நடந்தது. நேதன் லயன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்திற்கு ஷுப்மன் கில் இறங்கி வந்து ஆடி கால்காப்பில் வாங்கினார். பேட்டும் அருகில் இருந்ததால் பேட்டில் பட்டது போல் தெரிந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா ரிவியூ கேட்க அதில் கால்காப்பில்தான் முதலில் பந்து பட்டது தெரியவந்தது. சுப்மன் கில் எல்.பி.தீர்ப்புக்கு முன் கட்டாயமான 3 மீ தூரத்தைத் தாண்டி வந்துதான் ஸ்ட்ரோக் ஆடினார். அதனால் அங்கேயே டிஆர்எஸ் முடிந்துவிட்டது. அது நாட் அவுட் என்று கூறியிருக்க வேண்டிய டிவி நடுவர் பந்து ஸ்டம்பை அடிக்குமா என்று பார்க்கலாம் என்று பால் ட்ராக்கிங் கேட்டது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
மூன்று மீட்டர் தூரம் சுப்மன் கில் இறங்கி வந்து காலில் வாங்கினார் என்றால் அங்கேயே டிஆர்எஸ் ரிவியூ முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பால் ட்ராக்கிங் கேட்டு நடுவர் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். பந்து ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால் சுப்மன் கில்லின் பேடில் பட்ட போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே காட்டியது.
அவர் இறங்கி வந்து ஆடி இருந்தாலும் நாட் அவுட், பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் சுப்மன் கில் பேடைத் தாக்கியது. எனவே இந்த வகையிலும் நாட் அவுட். ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் நடுவரிடம் விளக்கம் கேட்டனர்.
பந்து ஸ்டம்பில் படுகிறதே நீங்கள் எப்படி நாட் அவுட் என்று கேட்டீர்கள் என்று நேதன் லயன் சிரித்தபடியே கேள்வி கேட்டார். ஸ்மித்தும் வாதம் புரிந்தார். அதற்கு நடுவர் லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று நினைத்து நாட் அவுட் என்றதாகத் தெரிவித்தார். ரோகித்தும் தன் பங்குக்கு ஏதோ சொன்னார். இந்த வாத விவாதங்கள் குழப்பங்களை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மா இதன் பிறகு பேக் ஃபுட் பஞ்ச் ஆட அது நேராக ஷாட் கவரில் லபுஷேனிடம் கேட்ச் ஆனது. முன்னதாக ரோகித் சர்மா மிட்செல் ஸ்டார்க் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை மிக அழகாக ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு சிக்சருக்குத் தூக்கினார். 3 பவுண்ட்ரி 1 சிக்சருடன் 35 ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT