Published : 11 Mar 2023 01:44 PM
Last Updated : 11 Mar 2023 01:44 PM

டேரில் மிட்செல் சதம்! மேட் ஹென்றியின் ‘கபில் தேவ்’ ரக அதிரடியில் நியூஸி. முன்னிலை!

சதம் அடித்த டேரில் மிட்செல்

நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் குவித்து 18 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பவுலர் மேட் ஹென்றி 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 75 பந்துகளில் 72 ரன்கள் விளாச ஆட்டத்தின் போக்கே மாறியது. இதோடு ஆட்ட முடிவில் இலங்கை அணி தன் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து திணறி வருகின்றது.

ஆஞ்சேலோ மேத்யூஸ் 20 ரன்களுடனும் பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களுடனும் களத்தில் நிற்க பிளைர் டிக்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். நியூஸிலாந்து அணி இன்று 162/5 என்று தொடங்கியது. டேரில் மிட்செல் 40 ரன்களுடனும் மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்களுடனும் தொடங்கினர். ஆனால் மைக்கேல் பிரேஸ்வெல் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஜெயசூரியா வீசிய பந்தை முன்னால் வந்து ஆடுவதற்குப் பதிலாக பின்னால் சென்று ஆட முயல விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

டேரில் மிட்செல் இலங்கை பவுலர்களைக் குழப்பி விட்டார். கிரீசிற்குள் அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தார். ஒன்று இறங்கி வந்து ஆடுவார் இல்லையெனில் வழக்கத்திற்கு மாறாக கிரீசிலிருந்து ஒரு அடி முன்னால் ‘கார்டு’ எடுத்தார். இது இலங்கை பவுலர்களைக் குழப்பியது. இதனால் ரஜிதா, அசிதா லெந்த்தை பரமாரிக்க முடியவில்லை. 124 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் எடுத்த மிட்செல் 184 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். கடைசியில் `102 ரன்களில் குமாராவின் அவுட்ஸ்விங்கருக்கு டிக்வெலாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முன்னதாக டிம் சவுதீ 20 பந்துகளில்ல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களை விளாசி வெளியேறினார். மேட் ஹென்றி முதலில் 45 பந்துகளில் 20 ரன்களையே எடுத்து நிதானம் காட்டினார், ஆனால் திடீரென அவருக்குள் ஒரு வெறி புகுந்தது. அடுத்த 30 பந்துகளில் 52 ரன்களை கிழித்து எடுத்தார். தனஞ்ஜய டி சில்வாவின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை லாங் ஆனில் விளாசி ஒரு பேக்ஃபுல் கவர் பவுண்டரியையும் விளாசினார். பிறகு ரஜிதா வகையாகச் சிக்கினார். அந்த ஓவரில்தான் ரஜிதாவை விளாசித்தள்ளினார் ஹென்றி. 5 பந்துகள் பவுண்டரிகளுக்குப் பறந்தன அதில் ஒன்று அற்புதமான நேர் சிக்ஸ். ஆனால் அஷிதா பெர்னாண்டோவின் யார்க்கர் ஹென்றியை வெளியேற்றியது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தன் பங்குக்கு 3 டவரிங் சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களை 24 பந்துகளில் விளாச இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 355 ரன்களைக் கடந்து சென்றது நியூஸிலாந்து. கடைசி 4 பேட்டர்கள் 124 பந்துகளில் 126 ரன்களை அடிக்கவிட்டு இலங்கை சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் 188/6 என்று இருந்த நியூஸிலாந்தை 240-50 ரன்களில் காலி செய்திருந்தால் 105 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் வெற்றி வாய்ப்பும் கூடிவந்திருக்கும்.

ஹென்றியின் கபில் தேவ் ரக காட்டடியிலும் சவுதி, நீல் வாக்னரின் சிக்சர்களையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் 18 ரன்கள் நியூஸிலாந்து முன்னிலை பெற, இலங்கை தன் 2வது இன்னிங்ஸில் 83/3 என்று 65 ரன்களையே முன்னிலையாகப் பெற்றுள்ளது. நாளை 4ம் நாள் மிகவும் சுவாரஸியமான டெஸ்ட் போட்டியாக இது அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x