Published : 10 Mar 2023 10:48 PM
Last Updated : 10 Mar 2023 10:48 PM

FIH புரோ லீக் ஹாக்கி | உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

இந்திய ஹாக்கி அணி வீரர்

ரூர்கேலா: 2022-23 FIH புரோ லீக் ஹாக்கி தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 30, 32 மற்றும் 43-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் பதிவு செய்தது. 45 மற்றும் 58-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்து ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது ஜெர்மனி. ஹர்மன்பிரீத் ஒரு கோல் பதிவு செய்தார். சுக்ஜித் இரண்டு கோல்களை பதிவு செய்தார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் இந்த தொடரில் 2022-23 சீசனில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 11 புள்ளிகளுடன் தற்போது இந்தியா புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் உள்ளன.

இதற்கு முன்னர் நடைபெற்ற 2019, 2020-21, 2021-22 தொடர்களை ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் வென்றுள்ளன. இந்திய அணி 2021-22 தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது. 2020-21 தொடரில் நான்காவது இடத்தை பிடித்திருந்தது. நடப்பு தொடரில் ஹர்மன்பிரீத், 7 கோல்களை பதிவு செய்து அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x