Published : 10 Mar 2023 06:11 AM
Last Updated : 10 Mar 2023 06:11 AM
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வலுவாக தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா சதம் விளாசினார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் மொகமது சிராஜூக்கு பதிலாக மொகமது ஷமி இடம் பெற்றார். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஜோடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 61 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் டிராவிஸ் ஹெட், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கிரீஸைவிட்டு வெளியே வந்து டிராவிஸ் ஹெட் அடித்த பந்து, மிட் ஆன் திசையில் நின்ற ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 44 பந்துகளை சந்தித்த டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் 3 ரன்களில் மொகமது ஷமி பந்தில் போல்டானார். 72 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
நிதானமாக விளையாடிய ஸ்மித் 135 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து ஸ்மித் 79 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 17 ரன்களில் மொகமது ஷமி பந்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் சீராக ரன்கள் சேர்த்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களை கடும் சோதனைகளுக்கு உட்படுத்திய உஸ்மான் கவாஜா 246 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் தனது 14-வது சதத்தை அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 104, கேமரூன் கிரீன் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த ஜோடி கூட்டாக 116 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 2 விக்கெட்களையும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க இன்றைய 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.
முதன்முறையாக…: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக 6 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட எடுக்காமல் ஸ்மித் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. கடைசி 6 இன்னிங்ஸில் அவர் முறையே 37, 25*, 0, 9, 26, 38 ரன்கள் சேர்த்துள்ளார்.
7 ரன்னில் நழுவின வாய்ப்பு: அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 7 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் தவறவிட்டார். உமேஷ் யாதவ் வீசிய 6-வது ஓவரில் இது நிகழ்ந்தது.
9 ஓவர்களில் 54 ரன்கள்..: இந்திய அணி 81 ஓவர்கள் முடிந்ததும் 2-வது புதிய பந்தை எடுத்தது. இதன் பின்னர் வீசப்பட்ட 9 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களை சேர்த்தது. இந்த ரன்களை சேர்த்ததில் கேமரூன் கிரீன் பிரதான பங்குவகித்தார்.
6 மணி நேரம்…: தொடக்க வீரராக களமிறங்கி 6 மணி நேரத்துக்கும் மேலாக களத்தில் நின்று 251 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் சதம் அடித்தார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு சதம்...: இந்திய மண்ணில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்த இடது கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார் உஸ்மான் கவாஜா. கடைசியாக 2010-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் மார்கஸ் நார்த் சதம் அடித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT