Published : 08 Mar 2023 05:21 AM
Last Updated : 08 Mar 2023 05:21 AM
துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதுவரை 111 ரன்களே சேர்த்துள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 14 இன்னிங்ஸில் அவர், ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலியின் பார்ம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் யாருடைய பார்மையும் நான் பார்க்கவில்லை. ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருந்து வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்த போதிலும் ஆஸ்திரேலிய அணி3-வது போட்டியில் சிறப்பான பணியை செய்துள்ளது. இந்ததொடரில் பேட்டிங் கடினமாக இருந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இது பந்துகள் சுழல்வதால் மட்டும் நிகழவில்லை, சீரற்ற பவுன்ஸும் இருக்கிறது. இதனால் ஆடுகளத்தின் மீதான நம்பிக்கயை இழந்துவிடுவீர்கள்.
விராட் கோலி விஷயத்தில் நான் மீண்டும், மீண்டும் கூறுவது ஒன்றுதான், சாம்பியன் வீரர்கள் எப்போதும் ஒரு வழியை கண்டறிவார்கள். தற்போதைய நிலையில் விராட் கோலியிடம் ரன் வறட்சி இருப்பது போன்று தோன்றலாம். அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் அவர், ரன்கள் சேர்க்காமல் இருக்கலாம். விராட் கோலி ஒரு யதார்த்தவாதியும் கூட, பேட்ஸ்மேனாக ஒருவர் தடுமாற்றம் காணும்போதும், ரன்கள் சேர்க்காத போதும் அவர்களுக்கு யாரும் ஏதும் கூறதேவையில்லை. அதை அவர்களே புரிந்துகொள்வார்கள். விராட் கோலியின் பார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT