Published : 07 Mar 2023 05:38 AM
Last Updated : 07 Mar 2023 05:38 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் மகளிருக்கான ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் 52-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், 66-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வர்வரா கிரச்சேவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 வயதான மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் மார்டா கோஸ்ட்யுக் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். வர்வரா கிரச்சேவாவை வீழ்த்தியதும் டென்னிஸ் களத்தில் கண்ணீர் விட்டு அழுதார் மார்டா கோஸ்ட்யுக். போட்டி முடிவடைந்ததும் பரஸ்பரம் வீராங்கனைகள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் மார்டா கோஸ்ட்யுக், வர்வரா கிரச்சேவாவுடன் கைகுலுக்காமல் விலகிச் சென்றார்.
மார்டா கோஸ்ட்யுக் கூறும்போது, “தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை வென்றதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த கோப்பையை உக்ரைனுக்கும், களத்தில் போராடி இறக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
ஏடிஎக்ஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலம் மார்டா கோஸ்ட்யுக், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 40-வது இடத்துக்கு முன்னேறினார்.- ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT