Published : 07 Mar 2023 05:43 AM
Last Updated : 07 Mar 2023 05:43 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகின் கடினமான 350 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை இந்தியாவைச் சேர்ந்த சுகந்த் சிங் சுகி நிறைவு செய்துள்ளார்.
உலகின் கடினமான 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான டெலிரியஸ் வெஸ்ட் (200 மைல்கள்) ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர் சுகந்த் சிங் சுகி பந்தய தூரத்தை 102 மணி நேரம் 23 நிமிடங்களில் கடந்து நிறைவு செய்தார். சுமார் 350 கிலோ மீட்டர் தூர பந்தயத்தை நிறைவு செய்த 25 பேரில் 33 வயதான சுகந்த் சிங் சுகியும் ஒருவர்.
தனது அனுபவங்களை சுகந்த் சிங் சுகி யூடியூப் சானலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், “இது உலகின் கடினமான மராத்தான்களில் ஒன்றாகும். இந்த மாரத்தான் மனரீதியிலானது, சில நேரங்களில் விட்டுவிடலாம் என்று நினைக்கத் தோன்றும். நான்கு இரவுகள் தூக்கம் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
2,3 மற்றும் 4-வது நாட்களில் நான் மிகவும் போராடினேன். ஆனால் போட்டியில் இருந்த தன்னார்வலர்கள், இந்த சவாலை முடிக்க உதவினார்கள். கடந்த 2020-ம் ஆண்டு இந்த போட்டியில் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். இதனால் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். சவாலை நிறைவு செய்த கடைசி 4 பேரில் நானும் ஒருவன்” என்றார்.
சுகந்த் சிங் சுகி கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் லிமிட்லெஸ் ஹியூமன்ஸ், சேஸ்ஸிங் ஜூனியஸ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT