Published : 04 Mar 2023 04:04 PM
Last Updated : 04 Mar 2023 04:04 PM

இரானி கோப்பை | யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த தனித்துவ சாதனை!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் | கோப்புப்படம்

குவாலியர்: நடப்பு ஆண்டுக்கான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரானி கோப்பையின் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக இரானி கோப்பை நடத்தப்படுகிறது. இதில் ரஞ்சிக் கோப்பையை வென்ற அணியுடன் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விளையாடும். ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ரஞ்சிக் கோப்பையில் மாநிலம் சார்பாக விளையாடிய வீரர்கள் இடம் பிடிப்பார்கள்.

நடப்பு இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக அறிமுக வீரராக 21 வயதான ஜெய்ஸ்வால் விளையாடி வருகிறார். 2020 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இளம் வயது வீரர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாயடி வருகிறார்.

முதல் தர கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய 12-வது இந்தியராகி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை படைத்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் மட்டுமே. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1970-71 சீசனில் அவர் இந்தச் சாதனையை படைத்திருந்தார்.

இரானி கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மொத்தம் 357 ரன்களை இந்தப் போட்டியில் அவர் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை 332 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் வசம் இருந்தது. 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மத்திய பிரதேச அணி விரட்டி வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் கடைசி நாள் நாளையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x