Published : 04 Mar 2023 05:50 AM
Last Updated : 04 Mar 2023 05:50 AM

இந்தூர் டெஸ்ட் போட்டி தோல்வியால் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதில் சிக்கல்

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இரு அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது.

ஒருவேளை அகமதாபாத் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி டிராவில் முடிந்தாலோ இந்திய அணி சிக்கல்களை சந்திக்க நேரிடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா 68.52 வெற்றி சராசரி புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிட்டது.

அந்த அணி 18 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றி, 4 டிரா, 3 தோல்விகளுடன் 148 புள்ளிகள் பெற்றுள்ளது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தாலும் அந்த அணி 64.91 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே இருக்கும்.

இந்திய அணி 17 டெஸ்ட்போட்டிகளில் 10 வெற்றி, 2 டிரா, 5 தோல்விகளுடன் 123 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் வெற்றி சராசரி புள்ளிகள் 60.29 ஆகும். இவற்றில் இந்திய அணி ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக சில புள்ளிகளை இழந்தும் உள்ளது.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 62.5வெற்றி சராசரி புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தை தக்கவைத்துக்கொள்வதுடன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வி அடைந்தால் இந்திய அணியின் வெற்றி சராசரி புள்ளிகள் 56.94 ஆக குறையும். இந்த நிலை ஏற்பட்டால் இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அகமதாபாத் போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணியின் வெற்றி சராசரி புள்ளி 58.79 ஆகவும் அரிதாக டையில் முடிந்தால் 59.72 ஆகவும் குறையும். இந்த நிலை உருவானாலும் இலங்கை – நியூஸிலாந்து தொடரின் முடிவே இந்திய அணியின் தலை விதியை முடிவு செய்யும்.

இலங்கை அணி தற்போதைய நிலையில் 53.33 சராசரி புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வெல்ல வேண்டும். இது நிகழ்ந்தால் அந்த அணியின் வெற்றி சராசரி புள்ளி 61.11 ஆக அதிகரிக்கும்.

அதேவேளையில் இந்திய அணி தனது கடைசி டெஸ்டில் தோல்வி அடையவேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். ஆனால் இலங்கை அணி ஒரு போட்டியை டிரா செய்து ஒன்றில் வெற்றிபெற்றால் அந்த அணியின் வெற்றிசராசரி புள்ளி 55.55 ஆக இருக்கும். இந்த நிலை ஏற்பட்டால் இந்திய அணியானது அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும் 56.94வெற்றி சராசரி புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை எட்டிவிடும். இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 9-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x