Published : 03 Mar 2023 05:22 PM
Last Updated : 03 Mar 2023 05:22 PM

“எங்கள் திட்டங்கள் கைகூடவில்லை” - ஆஸி.க்கு எதிரான தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

“ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவுகிறோம் என்றால், நாம் எதிர்பார்த்த பல விஷயங்கள் சரியாக நடக்கவில்லை எனச் சொல்லலாம். முதல் இன்னிங்ஸில் நாங்கள் முறையாக பேட் செய்யவில்லை. அவர்கள் முதல் இன்னிங்ஸில் 80 - 90 ரன்கள் முன்னிலை பெற்றனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் எங்களது பேட்டிங்கில் ரன் சேர்க்க தவறினோம். அதனால் 75 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. முதல் இன்னிங்ஸில் முறையாக பேட் செய்திருந்தால் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக இந்தப் போட்டியில் மாறி இருக்கும்.

இப்போதைக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. எங்கள் எண்ணமெல்லாம் அகமதாபாத் டெஸ்டில் என்ன செய்யலாம் என்பதுதான். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சரியாக செய்தது என்ன என்பதை பார்க்க வேண்டி உள்ளது. சவாலான ஆடுகளங்களில் விளையாடும்போது நமக்கு துணிச்சல் வேண்டும். ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாம் நமது பணியை செய்ய வேண்டும். இந்தப் போட்டியில் நாதன் லயன் எங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் பந்து வீசினார். நாங்கள் அவரது பந்து வீச்சை துணிச்சலுடன் எதிர்கொள்ளவில்லை என நினைக்கிறேன். இந்தப் போட்டியில் எங்கள் திட்டங்கள் கைகூடவில்லை. எங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் அடாப்ட் செய்து கொள்ளவில்லை” என ரோகித் சொல்லி இருந்தார்.

மேலும், டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நீடிக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள்தான் நடந்தது. பாகிஸ்தானில் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் சலிப்பை தருவதாக மக்கள் சொல்லியுள்ளனர். நாங்கள் சுவாரஸ்யம் ஆக்குகிறோம் என ரோகித் சொல்லி இருந்தார். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களுக்குள் முடிவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இதனை சொல்லியுள்ளார். | வாசிக்க > இந்திய அணிக்கு எதிராகத் திரும்பிய பிட்ச்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x