Published : 02 Mar 2023 07:59 PM
Last Updated : 02 Mar 2023 07:59 PM
இந்தூர்: இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூர் டெஸ்ட் போட்டியில் அரைசதம் பதிவு செய்த நிலையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 88 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, 142 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அவருடன் ஏதேனும் ஒரு இந்தியா பேட்ஸ்மேன் களத்தில் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கான இலக்கு கூடி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது. இந்த சூழலில் ஆட்டத்திற்கு பிறகு புஜாரா தெரிவித்தது இதுதான்.
“இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தடுப்பாட்டத்தை நம்ப வேண்டும். பேட்ஸ்மேன்கள் பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணிக்க வேண்டியுள்ளது. மேலும், அட்டாக் மற்றும் டிபென்ஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். விரைந்து ரன் சேர்க்க வேண்டி பிரத்யேகமாக சில ஷாட்களை பயிற்சி செய்து வருகிறேன். அதில் ஒன்றுதான் நான் சிக்ஸர் அடித்த அந்த ஷாட். இருந்தும் நான் அவுட் ஆனதில் ஏமாற்றம்தான். அக்சர் உடன் கூட்டணி அமைந்து வரும் நேரம் பார்த்து விக்கெட்டை இழந்தேன். வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என நான் அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT