Published : 02 Mar 2023 05:43 AM
Last Updated : 02 Mar 2023 05:43 AM
இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பைடெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டிநேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கே.எல். ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், மொகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தொடக்க வீரராக ரோஹித்தும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். கில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ரோஹித் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குனேமன் பந்துவீச்சில் ஸ்டம்ப்பிங் ஆனார். ஷுப்மன் கில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது குனேமன் பந்துவீச்சில், கேப்டன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 1, விராட் கோலி 22, ரவீந்திர ஜடேஜா 4, ஸ்ரேயஸ் ஐயர் 0, விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 17, அக்சர் படேல் 12, அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 17 ரன்கள் சேர்த்தனர். அணி வீரர்களில் கோலி எடுத்த 22 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இதனால் 33.2 ஓவர்களில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குனேமன் அபாரமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்தார். நேதன் லயன் 3 விக்கெட்களையும், டாட் மர்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை 9 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஜடேஜா. 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜாவும், மார்னஸ் லபுஷேனும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். லபுஷேன் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்தில் அவுட்டானார். உஸ்மான் கவாஜா நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். 147 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் வீழ்ந்தார்.
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 26 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்தில், விக்கெட் கீப்பர் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 6 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்ஸாம்ப் 7 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா இன்று 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.
> ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் ரன் கணக்கை தொடங்காமல் இருந்தபோது ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது. அது நோ-பால் என அறிவிக்கப்பட்டதால் அவர் தப்பித்தார். பின்னர் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் லபுஷேன்.
> முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் குனேமன். அவர் 9 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
> டெஸ்ட் போட்டிகளில் தனது 21-வது அரை சதத்தை ஆஸி. அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பதிவு செய்தார்.
> ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது இந்திய அணி சார்பில் 3 முறை ரிவியூ செய்யப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக 3 ரிவியூ வாய்ப்புகளும் அவுட் இல்லை என மறுக்கப்பட்டது. இந்த 3 ரிவியூ வாய்ப்புகளும் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சின்போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3-வது முறையாக மர்பி பந்தில் அவுட்: இந்தத் தொடரில் ஆஸி. வீரர் டாட் மர்பி பந்தில் 3-வது முறையாக ஆட்டமிழந்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. மேலும், இந்தத் தொடரில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. நாக்பூர் டெஸ்டில் 12, டெல்லி டெஸ்டில் 44, 20 என ரன்கள் சேர்த்த விராட் கோலி, இந்தூர் டெஸ்டில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
4-வது குறைந்துபட்ச ஸ்கோர்: 109 ரன்கள் எடுத்துள்ளதன் மூலம், உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு மும்பையில் 104 ரன்களிலும் (2004-ம் ஆண்டு), புனேவில் 105, 107 ரன்களிலும் (2017) இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-வது குறைந்தபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
2 முறை தப்பித்த ரோஹித் சர்மா: ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2 முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பு இருந்தது. ஒரு முறை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தும், 2-வது முறை எல்பிடபிள்யூ முறையிலும் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியினரும் ரிவியூ கேட்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் ரிவியூ கேட்டிருந்தால் ரோஹித் ஆட்டமிழந்திருப்பார். ஆனாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய ரோஹித் 12 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT