Published : 01 Mar 2023 08:38 PM
Last Updated : 01 Mar 2023 08:38 PM

IND vs AUS | 3-வது டெஸ்டின் முதல் நாள் கேப்டன் ரோகித்துக்கு மோசமான நாளா?

ரோகித் சர்மா | கோப்புப்படம்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு களத்தில் சற்றே மோசமான நாளாக அமைந்துள்ளதாக தெரிகிறது. பேட் செய்தபோது தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார். அதேபோல இந்திய அணி பந்து வீசிய போது மூன்று டிஆர்எஸ் வாய்ப்புகளையும் வீணடித்தார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற செய்தார் கேப்டன் ரோகித். இன்று தொடங்கிய இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட முடிவின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார்: இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். 23 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் தனது விக்கெட்டை இழந்தார். முதல் இன்னிங்ஸின் 36-வது பந்தை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமன் வீசினார். அந்த பந்தை ரோகித் எதிர்கொண்டார். கிரீஸை விட்டு இறங்கி வந்து ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார். பந்தை பற்றியதும் ஆஸி. அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அது இந்திய அணியின் முதல் விக்கெட்டாக சரிந்தது. அப்போது 27 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. அடுத்த 82 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 9 விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்து (எட்ஜ்) மற்றும் நான்காவது பந்து (LBW) என இரண்டு வாய்ப்புகளை ரோகித்துக்கு கொடுத்தது ஆஸ்திரேலியா. இருந்தும் அவர் அந்த இரண்டு வாய்ப்புகளையும் வீணடித்தார்.

வீணடிக்கப்பட்ட 3 ரிவ்யூ: ஆஸ்திரேலிய அணி பேட் செய்தபோது இந்திய அணி வசம் இருந்த மூன்று டிஆர்எஸ்-ஸை கேப்டன் ரோகித் வீணடித்தார். இது விக்கெட் கீப்பர் மற்றும் பந்து வீச்சாளருக்கு இருந்த நம்பிக்கையின் பேரில் ரோகித், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் அந்த மூன்று டிஆர்எஸ்-க்கும் சென்றிருக்கலாம். ஆனாலும், ஆஸ்திரேலிய அணியை விரைந்து ஆல் அவுட் செய்ய வேண்டுமென்ற அவரது விருப்பத்தின் வெளிப்பாடாகவே அது தெரிந்தது. ஒரு கட்டத்தில் இல்லாத டிஆர்எஸ் வாய்ப்பை ரோகித் எடுத்திருந்தார்.

இந்த 3 டிஆர்எஸ்-ம் ஜடேஜா வீசி இருந்த ஓவர்களில் எடுக்கப்பட்டவை. இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி இழந்துள்ள 4 விக்கெட்டுகளையும் அவர்தான் கைப்பற்றி இருந்தார். நாளைய தினம் கேப்டன் ரோகித், களத்தில் திறம்பட செயல்படுவார் என நம்புவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x