Published : 01 Mar 2023 06:06 AM
Last Updated : 01 Mar 2023 06:06 AM
வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
வெலிங்டனில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ- ஆன் ஆனது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 483 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
258 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 23, ஆலி ராபின்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இங்கிலாந்து அணி.
ஆலி ராபின்சன் 2, பென் டக்கெட் 33, ஆலி போப் 14 ரன்களில்ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக், ஒரு பந்தைகூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். 80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஜோடி போராடியது.
6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை நெய்ல் வாக்னர் பிரித்தார். வெற்றிக்கு 56 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ஒரு ரன் இடைவெளியில் இருவரும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 116 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், ஜோ ரூட் 113 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 95 ரன்களும் சேர்த்து நெய்ல் வாக்னர் பந்தில் வெளியேறினர். அப்போது ஸ்கோர் 202 ஆக இருந்தது.
தொடர்ந்து, ஸ்டூவர்ட் பிராடு 11 ரன்களில் ஹென்றி பந்தில் நடையை கட்டினார். எனினும் விக்கெட் கீப்பர் பென்ஃபோக்ஸ் மட்டையை சுழற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த போது பென்ஃபோக்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார்.
நெய்ல் வாக்னர் வீசிய 74-வது ஓவரில் ஜேக் லீச் 1 ரன்னும், ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுண்டரியும் விரட்ட இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் தனது அடுத்த ஓவரில் ஆண்டர்சனை ஆட்டமிழக்க செய்தார். லெக் திசையில் வீசப்பட்ட பந்தை ஆண்டர்சன், விக்கெட் கீப்பருக்கு பின்புறம் அடிக்க முயன்ற போது பிளண்டலிடம் கேட்ச் ஆனது. முடிவில் இங்கிலாந்து அணி 74.2 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆண்டர்சன் 6 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்தார்.
நியூஸிலாந்து தரப்பில் நெய்ல் வாக்னர் 4, டிம் சவுதி 3, மேட் ஹென்றி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 சமனில் முடித்தது. மவுண்ட்மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
3-வது நாடு..: பாலோ-ஆன் பெற்று வெற்றியை வசப்படுத்திய 3-வது அணி என்ற பெருமையை நியூஸிலாந்து பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்து, இந்தியா (2001-ம் ஆண்டு) அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளன. இதில் இங்கிலாந்து இரு முறை (1894, 1981) வெற்றி கண்டிருந்தது.
‘ஒரு ரன்னில்’ 2-வது அணி: டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள 2-வது அணி நியூஸிலாந்து ஆகும். இதற்கு முன்னர் இதே ரன் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றி கண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT